ஜீ மற்றும் சோனி நிறுவனங்களின் இணைப்பிற்கு ஒப்புதல் அளித்த NCLT
நீண்ட கால காத்திருப்புக்குப் பிறகு சோனி பிக்சர் நெட்வொர்க்ஸ் இந்தியா மற்றும் ஜீ எண்டர்டெயின்மென்ட் ஆகிய இரு வணிக நிறுவனங்களின் இணைப்பிற்கு ஒப்புதல் அளித்திருக்கிறது தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயம். 2021-ம் டிசம்பரில் மேற்கூறிய இரு நிறுவனங்களையும் இணைப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டது. ஆனால், அதனைத் தொடர்ந்து பல்வேறு காரணங்களால், அதன் இணைப்பு தாமதமாகி வந்த நிலையில், தற்போது ஒப்புதல் கிடைத்திருக்கிறது. மேற்கூறிய இரு நிறுவனங்களின் இணைப்பிற்கு, முன்னரே தேசிய பங்குச் சந்தை, மும்பை பங்குச் சந்தை, இந்திய போட்டி ஆணையம் மற்றும் செபி ஆகிய அமைப்புகளிடம் அனுமதி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
பங்குச்சந்தையில் உயர்ந்த ஜீ நிறுவனப் பங்குகள்:
ஜீ மற்றும் சோனி நிறுவனங்களின் இணைப்பிற்கு தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயம் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, இந்திய பங்குச் சந்தைகளில் ஜீ நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்து வருகிறது. நேற்றைய வர்த்தக நாளின் போது ரூ.242.25 என்ற விலையில் ஜீ நிறுவனப் பங்குகள் பங்குசந்தையில் வர்த்தகமாகி வந்தன. நிறுவனங்களின் இணைப்பிற்கான ஒப்புதல் கிடைத்த பிறகு, அந்நிறுவனப் பங்குகளின் விலை 15% உயர்ந்து உயர்ந்து அதிகபட்சமாக ரூ.281.90 என்ற விலை வரை வர்த்தகமாயின. மேற்கூறிய நிறுவனங்களின் இணைப்பிற்கு பின்பு, ஒருங்கிணைந்த நிறுவனத்தின் 50.9% பங்குகளை சோனி நிறுவனமும், 45.2% பங்குகளை ஜீ நிறுவனமும், மீதமுள்ள பங்குகள் ஜீ நிறுவன ப்ரமோட்டர்களும் வைத்துக் கொள்ளவிருக்கின்றனர்.