3 நாள் வங்கி வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு: இன்று வழக்கம்போல் இயங்கும் வங்கிகள்
செய்தி முன்னோட்டம்
இந்திய வங்கிகள் சங்கத்துடன் (IBA) ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதைத் தொடர்ந்து, செப்டம்பர் 28 முதல் 30 வரை நடைபெறவிருந்த நாடு தழுவிய வங்கி வேலைநிறுத்தப் போராட்டத்தை வங்கி ஊழியர் சங்கங்கள் ஒத்திவைத்துள்ளன. அரையாண்டு கணக்கு முடிக்கும் முக்கியமான காலகட்டத்தில் அறிவிக்கப்பட்ட இப்போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், திங்கட்கிழமை (செப்டம்பர் 28) முதல் அனைத்து வங்கிக் கிளைகளும் வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தை
பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட முக்கிய முடிவுகள்
வங்கி ஊழியர் சங்கங்களின் அமைப்பான UFBU மற்றும் IBA இடையேயான பேச்சுவார்த்தையில், வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே வங்கிச் சேவை (அனைத்து சனிக்கிழமைகளுக்கும் விடுமுறை) என்ற கோரிக்கையை ஆராய உடனடியாக உயர்நிலைக் குழு ஒன்று அமைக்க IBA ஒப்புக்கொண்டுள்ளது.
இக்குழு வாடிக்கையாளர்கள் உள்ளிட்ட அனைத்துப் பங்குதாரர்களுடனும் கலந்துபேசி மாற்றுகளை ஆராயும்.
தற்சமயம் 2 மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் மட்டுமே வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது.
அதிகாரிகள் (Scale IV மற்றும் அதற்கு மேல்) பயன்பெறும் வகையிலான செயல்திறன் சார்ந்த ஊக்கத்தொகை திட்டம் குறித்தும் மறுபரிசீலனை செய்ய இரு தரப்பும் ஒப்புக்கொண்டுள்ளன.
பின்னணி
வேலைநிறுத்த அழைப்பும் பின்னணியும்
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக 5 நாள் வங்கி சேவை கோரிக்கை நிலுவையில் உள்ளதாகக் கூறி, 3 நாட்கள் வேலைநிறுத்தம் மற்றும் அக்டோபர் 26 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்யப் போவதாக வங்கிச் சங்கங்கள் அறிவித்திருந்தன.
தற்போது பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், திட்டமிடப்பட்ட போராட்டங்கள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், புதிய வேலைநிறுத்த தேதிகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை என்றும் UFBU தெரிவித்துள்ளது.