கவுதம் அதானியை பின்தள்ளி இந்திய பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தார் முகேஷ் அம்பானி
ஒவ்வொரு ஆண்டும் இந்திய பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது ஹூரன் இந்தியா நிறுவனம். அந்நிறுனம் வெளியிட்டுள்ள தகவல்களின் படி தற்போது இந்தியாவில் 259 கோடீஸ்வரர்கள் இருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை கடந்த 2022ம் ஆண்டு 221 ஆக இருந்தது. கடந்தாண்டு முதலிடத்தில் இருந்த கவுதம் அதானியை பின்தள்ளி, இந்தாண்டு இந்திய பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்திருக்கிறார் ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி. முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ரூ.8.08 லட்சம் கோடிகளாம். இந்தாண்டு தொடக்கத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனமானது அதானி குழுமத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததைத் தொடர்ந்து அவரது நிறுவன பங்கு மதிப்புகள் குறைந்தன.
இரண்டாம் இடத்தில் கவுதம் அதானி:
அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் குறைந்த நிலையில், கவுதம் அதானியின் சொத்து மதிப்பும் குறைந்தது. எனவே, ரூ.4.75 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் ஹூரன் இந்தியாவின் 2023ம் ஆண்டிற்கான இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார் அதானி. அதானியைத் தொடர்ந்து, ரூ.2.78 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் மூன்றாம் இடத்தில் சீரம் நிறுவனத்தின் தலைவர் சைரஸ் பூனாவாலாவும், நான்காம் இடத்தில் ரூ.2.29 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் எச்சிஎல் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவனர் ஷிவ் நாடாரும் இடம் பிடித்திருக்கின்றனர். இவர்களைத் தொடர்ந்து 5ம் இடத்தில் தொழிலதிபர் கோபிசந்த் இந்துஜாவும், 6 மற்றும் 7ம் இடங்களில் சன் ஃபார்மா தலைவர் திலீப் சங்வி மற்றும் லட்சுமி மிட்டல் ஆகியோர் இடம்பெற்றிருக்கின்றனர்.
அதிக சொத்து மதிப்பு கொண்ட இந்திய நிர்வாகிகள்:
இந்திய பணக்காரர்கள் மட்டுமல்லாது, இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டு பிற நிறுவனங்களில் வேலை செய்யும், அதிக சொத்து மதிப்பு கொண்ட நிர்வாகிகள் பட்டியலையும் வெளியிட்டிருக்கிறது அந்நிறுவனம். அந்தப் பட்டியலில் ரூ.20,800 கோடி சொத்து மதிப்புடன் அரிஸ்டா நெட்வொர்க்ஸ் நிறுவனத்தின் சிஇஓவான ஜெயஸ்ரீ உள்ளாள் முதலிடத்தில் இருக்கிறார். ரூ.15,800 கோடி மற்றும் ரூ.7,600 கோடி சொத்துக்களுடன் கூகுள் கிளவுடு நிறுவன சிஇஓ தாமஸ் குரியன் இரண்டாவது இடத்திலும், உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா மூன்றாவது இடத்திலும் உள்ளனர். நம் அனைவருக்கும் தெரிந்த மைக்ரோசாப்ட் மற்றும் கூகுள் நிறுவனங்களின் சிஇஓக்களான சத்யா நாதெல்லா மற்றும் சுந்தர் பிச்சை ஆகியோர், ரூ.7,600 கோடி மற்றும் ரூ.5,400 கோடி சொத்துக்களுடன் முறையே 4 மற்றும் 6வது இடங்களைப் பிடித்திருக்கிறார்கள்.