Loading...
2025-26 ITR தாக்கல் செய்ய நாளையே கடைசி நாள்; தவறவிட்டால் எவ்வளவு அபராதம்?
2025-26 ITR தாக்கல் செய்ய நாளையே கடைசி நாள்

2025-26 ITR தாக்கல் செய்ய நாளையே கடைசி நாள்; தவறவிட்டால் எவ்வளவு அபராதம்?

எழுதியவர் Venkatalakshmi V
Jul 30, 2026
01:00 pm

செய்தி முன்னோட்டம்

கடந்த 2025-26 நிதியாண்டிற்கான (மதிப்பீட்டு ஆண்டு 2026-27) வருமான வரி கணக்கு (ITR) தாக்கல் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாதச் சம்பளம் பெறுபவர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் தங்களின் வருமான வரிக் கணக்கைச் சமர்ப்பிக்க ஜூலை 31-ஆம் தேதியே கடைசி நாளாகும். அதிகப்படியாக பிடித்தம் செய்யப்பட்ட வரியை (TDS/TCS) திரும்பப் பெறவும், வரிப் பொறுப்புகளைச் சரிபார்க்கவும் ஐ.டி.ஆர் தாக்கல் செய்வது அவசியமாகும். ஐ.டி.ஆர் தாக்கல் செய்வதற்குப் படிவம் 16 (Form 16), ஆண்டு வருவாய் பட்டியல் (AIS), படிவம் 26AS, பான், ஆதார் அட்டை, வங்கிச் கணக்கு அறிக்கை (Bank Statement), முதலீட்டுச் சான்றிதழ்கள் மற்றும் காப்பீட்டு பிரீமியம் ரசீதுகள் போன்றவை மிக முக்கியமான ஆவணங்களாகும்.

கட்டாயம்

யாரெல்லாம் கட்டாயம் ITR தாக்கல் செய்ய வேண்டும்?

வருமான வரி வரம்பிற்கு உட்பட்டவர்கள் மட்டுமின்றி, பல்வேறு நிதிப் பரிவர்த்தனைகளை மேற்கொண்ட தனிநபர்களும் கட்டாயம் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.

குறிப்பாக, கீழ்கண்டவர்கள் ITR தாக்கல் செய்ய வேண்டும்.

புதிய வரி முறையின் கீழ் ரூ. 4 லட்சத்திற்கு மேலும், பழைய வரி முறையின் கீழ் ரூ. 2.5 லட்சத்திற்கு மேலும் வருமானம் உள்ளவர்கள்.

ஆண்டிற்கு ரூ. 1 லட்சத்திற்கு மேல் மின்சாரக் கட்டணம் செலுத்தியவர்கள் அல்லது வெளிநாட்டுப் பயணங்களுக்கு ரூ. 2 லட்சத்திற்கு மேல் செலவிட்டவர்கள்.

வங்கிக் கணக்கில் ரூ. 1 கோடிக்கும் அதிகமாகப் பரிவர்த்தனை செய்தவர்கள் மற்றும் வெளிநாடுகளில் சொத்து வைத்திருப்பவர்கள்.

சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட TDS/TCS தொகையைத் திரும்பப் பெற விரும்புபவர்கள்.

நன்மைகள்

ஐ.டி.ஆர் தாக்கல் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

வீட்டுக் கடன், வாகனக் கடன் மற்றும் தனிநபர் கடன்களை எளிதாக பெறவும், வெளிநாட்டு விசா விண்ணப்பங்களுக்கும் ITR ரசீது முதன்மை ஆவணமாகச் செயல்படுகிறது.

சுய தொழில் செய்பவர்கள் மற்றும் ஒப்பந்தப் பணியாளர்களுக்கு முறையான வருமான சான்றாக இது பயன்படுகிறது.

பங்குச் சந்தை மற்றும் தொழிலில் ஏற்படும் நஷ்டங்களை அடுத்தடுத்த ஆண்டுகளுக்குக் கொண்டு சென்று வரியைக் குறைக்க உதவுகிறது.

குறிப்பிட்ட காலக்கெடுவுக்கு பிறகு தாக்கல் செய்தால் ரூ. 5,000 வரை அபராதம் விதிக்கப்படும்.

இருப்பினும், வருமானம் ரூ. 5 லட்சத்திற்குள் இருக்கும் நபர்களுக்குக் தாமத கட்டணமாக ரூ. 1,000 மட்டுமே வசூலிக்கப்படும்.

தாமதமான படிவங்களை அபராதத்துடன் டிசம்பர் 31-க்குள் சமர்ப்பிக்கலாம்.

ADVERTISEMENT