LOADING...
இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பு 672.58 பில்லியன் டாலராக உயர்வு: ரிசர்வ் வங்கி தகவல்
இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பு 672.58 பில்லியன் டாலராக உயர்வு

இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பு 672.58 பில்லியன் டாலராக உயர்வு: ரிசர்வ் வங்கி தகவல்

எழுதியவர் Sekar Chinnappan
Jun 26, 2026
06:31 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் ஒட்டுமொத்த அந்நியச் செலாவணி இருப்பு கடந்த ஜூன் 19 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 963 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதிகரித்து, மொத்தம் 672.587 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. இதற்கு முந்தைய வாரத்தில் நாட்டின் ஒட்டுமொத்த அந்நியச் செலாவணி இருப்பு சுமார் 9.985 பில்லியன் டாலர்கள் என்ற பெரிய அளவில் சரிவை சந்தித்து 671.625 பில்லியன் டாலராகக் குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது ஒரே வாரத்தில் அந்நியச் செலாவணி மீண்டும் உயர்ந்துள்ளது நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு சாதகமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

வெளிநாட்டு நாணயம்

வெளிநாட்டு நாணய சொத்துக்களின் மதிப்பு சரிவு

அந்நியச் செலாவணி இருப்பின் மிக முக்கிய அங்கமாக விளங்கும் வெளிநாட்டு நாணய சொத்துக்களின் மதிப்பு, இந்த குறிப்பிட்ட வாரத்தில் 3.072 பில்லியன் டாலர்கள் குறைந்து 541.217 பில்லியன் டாலராக மாறியுள்ளது என்று ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. டாலர் மதிப்பில் குறிப்பிடப்படும் இந்த வெளிநாட்டு நாணய சொத்துக்களில், இந்திய ரிசர்வ் வங்கி தன் வசம் வைத்துள்ள யூரோ, பவுண்ட் மற்றும் யென் போன்ற அமெரிக்க டாலர் அல்லாத இதர சர்வதேச நாணயங்களின் மதிப்பில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களின் விளைவுகளும் முழுமையாக அடங்கும்.

தங்க இருப்பு

தங்க இருப்பின் மதிப்பு பல பில்லியன் டாலர்கள் அதிரடி உயர்வு

நாட்டின் நாணய சொத்துக்களின் மதிப்பு குறைந்த போதிலும், ரிசர்வ் வங்கியிடம் உள்ள தங்க இருப்பின் மதிப்பு இந்த வாரத்தில் மிக அதிக வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இதன்படி, இந்தியாவின் தங்க இருப்பின் மதிப்பு ஒரே வாரத்தில் 4.110 பில்லியன் டாலர்கள் அதிகரித்து, ஒட்டுமொத்தமாக 107.930 பில்லியன் டாலராக எகிறியுள்ளது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாகவே, வெளிநாட்டு நாணய சொத்துக்களின் சரிவையும் தாண்டி இந்தியாவின் ஒட்டுமொத்த அந்நியச் செலாவணி இருப்பு நடப்பு வாரத்தில் பாசிட்டிவ் வளர்ச்சி அடைய இந்த தங்க இருப்பு முக்கியக் காரணியாக அமைந்துள்ளது.

Advertisement

சர்வதேச நாணய நிதியம்

எஸ்டிஆர் (SDR) மற்றும் சர்வதேச நாணய நிதிய இருப்பு நிலவரம்

மத்திய வங்கியின் தரவுகளின்படி, சர்வதேச நாணய நிதியத்தில் உள்ள இந்தியாவின் சிறப்பு வரைதல் உரிமைகள் (SDRs) இந்த வாரத்தில் 52 மில்லியன் டாலர்கள் குறைந்து 18.647 பில்லியன் டாலராக நிலைபெற்றுள்ளது. அதேபோல, சர்வதேச நாணய நிதியத்தில் உள்ள இந்தியாவின் இருப்பு நிலையும் இந்த வாரத்தில் 22 மில்லியன் டாலர்கள் சற்று சரிந்து 4.793 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது என்று ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ வாராந்திர நிதிநிலை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

Advertisement