
துருக்கி மற்றும் அஜர்பைஜானுடன் எந்த வணிக உறவும் கிடையாது; அகில இந்திய வர்த்தகர் கூட்டமைப்பு முடிவு
செய்தி முன்னோட்டம்
ஒரு உறுதியான நடவடிக்கையாக, வெள்ளிக்கிழமை அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு (CAIT) ஏற்பாடு செய்த தேசிய வர்த்தக மாநாட்டின் போது, இந்தியா முழுவதிலுமிருந்து 125 க்கும் மேற்பட்ட உயர்மட்ட வர்த்தகத் தலைவர்கள் துருக்கி மற்றும் அஜர்பைஜானுடனான வர்த்தக உறவுகளை முற்றிலுமாக துண்டிக்க முடிவு செய்தனர்.
பயங்கரவாதத்திற்கு ஆதரவாக உள்ள பாகிஸ்தான் மீது இந்தியா ஆபரேஷன் சிந்தூரைத் தொடங்கிய பிறகு, இரு நாடுகளும் பாகிஸ்தானுக்கு வெளிப்படையாக ஆதரவளித்தன.
இதற்கு பதிலளிக்கும் விதமாக முடிவு செய்யப்பட்டுள்ள இந்த நடவடிக்கையின் மூலம், மேற்குறிப்பிட்ட இரு நாடுகளுடனும் வர்த்தகம், சுற்றுலா மற்றும் திரைப்பட தயாரிப்பு உள்ளிட்ட அனைத்து வணிக நடவடிக்கைகளும் நிறுத்தப்படுகிறது.
ஆதரவு
அரசுக்கு ஆதரவு
24 மாநிலங்களின் பிரதிநிதிகள் ஒருமனதாக தீர்மானத்தை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்தனர்.
இந்த நாடுகளில் திரைப்படங்கள் அல்லது விளம்பர உள்ளடக்கங்களை படமாக்குவதைத் தவிர்க்குமாறு இந்திய திரைப்படத் துறை மற்றும் பெரு நிறுவனங்களுக்கும் அவர்கள் அழைப்பு விடுத்தனர்.
துருக்கி அல்லது அஜர்பைஜானில் தயாரிக்கப்படும் அத்தகைய எந்தவொரு உள்ளடக்கமும் நாடு தழுவிய புறக்கணிப்புகளை எதிர்கொள்ளும் என்று அகில இந்திய வர்த்தகர் கூட்டமைப்பு எச்சரித்தது.
மாநாட்டில் உரையாற்றிய கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பிரவீன் கண்டேல்வால், துருக்கி மற்றும் அஜர்பைஜானின் நிலைப்பாட்டைக் கண்டித்து, இது இந்தியாவின் நல்லெண்ணத்திற்கு துரோகம் விளைவிக்கும் செயல் என்று கூறினார்.