இந்தியா - பிரிட்டன் இடையே ஒரு வருடத்திற்குப் பிறகு மீண்டும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை
செய்தி முன்னோட்டம்
ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு இந்தியாவும் பிரிட்டனும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கான (FTA) பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க உள்ளன.
அதிகரித்து வரும் உலகளாவிய வர்த்தக பதட்டங்களுக்கு மத்தியில், இரு நாடுகளும் தங்கள் பொருளாதார உறவுகளை வலுப்படுத்த முயற்சிக்கும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கான கடைசி சுற்று பேச்சுவார்த்தைகள் மார்ச் 2024 இல் நடைபெற்றன.
ஆனால் மே 2024 இல் நடந்த பிரிட்டன் பொதுத் தேர்தல்கள் காரணமாக பின்னர் பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டது.
இப்போது, உயர்மட்ட பிரிட்டிஷ் பிரதிநிதிகள் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 23) டெல்லிக்கு வரும்நிலையில், பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கும் என தகவல் கசிந்துள்ளது.
பிரதிநிதிகள் வருகை
இந்தியாவிற்கான இங்கிலாந்து பிரதிநிதிகளின் வருகை
பிரிட்டன் வணிக மற்றும் வர்த்தக செயலாளர் ஜோனாதன் ரெனால்ட்ஸ் ஞாயிற்றுக்கிழமை இந்தியாவிற்கு மூன்று நாள் பயணத்தைத் தொடங்குவார்.
அவர் திங்களன்று வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயலை சந்திப்பார்.
இது சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு வழி வகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரிட்டன் பிரதிநிதிகள் குழுவில் முதலீட்டுத் துறையின் இணை அமைச்சர் பாப்பி குஸ்டாஃப்சனும் இடம்பெற்றுள்ளார்.
இருப்பினும், அவர் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளில் நேரடியாக ஈடுபட மாட்டார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் நிதியாண்டு 22 இல் $17.5 பில்லியனில் இருந்து நிதியாண்டு 24 இல் $21.34 பில்லியனாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பேச்சுவார்த்தை விபரங்கள்
தொழிலாளர் பரிமாற்றம் மற்றும் கட்டணக் குறைப்புக்கள்
முன்னாள் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கின் கீழ் இந்தியா-பிரிட்டன் சுதந்திர வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளின் கடைசி சுற்றில் தொழிலாளர் பரிமாற்றம் ஒரு முக்கிய சிக்கலாக இருந்தது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ் திறமையான நிபுணர்களுக்கான கட்டுப்பாடற்ற இடமாற்றத்தை இந்தியா ஆரம்பத்தில் வலியுறுத்தியது.
ஆனால், இப்போது மிகவும் நெகிழ்வான அணுகுமுறையை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்காட்ச் விஸ்கி மீதான கட்டணக் குறைப்புகளும் பேச்சுவார்த்தைகளில் அடங்கும்.
இருப்பினும், இந்தியா-ஆஸ்திரேலியா பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் ஆஸ்திரேலியாவுக்கு கொடுத்ததைப் போலவே சலுகைகளை இந்தியா வழங்க வாய்ப்பில்லை.
தாக்கம்
இங்கிலாந்தின் கார்பன் எல்லை சரிசெய்தல் நடைமுறையால் FTAவிற்கு பாதிப்பு
ஜனவரி 2026 முதல் பிரிட்டன் அதன் கார்பன் எல்லை சரிசெய்தல் நடைமுறையை (CBAM) திட்டமிட்டு செயல்படுத்துவது இந்தியாவுடனான முன்மொழியப்பட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் ஒரு சீரற்ற தன்மையை உருவாக்கக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
முன்னாள் வர்த்தக சேவை அதிகாரியும், பொருளாதார சிந்தனைக் குழுவான குளோபல் டிரேட் ரிசர்ச் இனிஷியேட்டிவ் (GTRI)-யின் நிறுவனருமான அஜய் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், "CBAM நடைமுறைக்கு வந்தவுடன், சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவிற்குள் நுழையும் பிரிட்டன் பொருட்கள் பூஜ்ஜிய வரிகளை கொண்டிருக்கும்.
அதே நேரத்தில் எஃகு மற்றும் பிற பொருட்கள் போன்ற இந்திய ஏற்றுமதிகள் பிரிட்டனில் கார்பன் வரிகளை எதிர்கொள்ளக்கூடும்." என்றார்.