சிங்கப்பூருக்கு மட்டும் 'சிறப்பு அரிசி ஏற்றுமதி'க்கு அனுமதி அளிக்கும் மத்திய அரசு
கடந்த ஜூலை 20-ம் தேதி முதல் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியின் ஏற்றுமதிக்குத் தடை விதித்தது மத்திய அரசு. இந்தியாவில் பருவநிலை மாற்றங்களின் காரணமாக, பல்வேறு மாநிலங்களில் அரிசி உற்பத்தி குறைந்தது. இதனைத் தொடர்ந்து, உள்நாட்டின் அரிசித் தேவையைச் சமாளிக்கவும், இந்தியாவில் அரிசியின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பாஸ்மாதி அல்லாத வெள்ளை அரிசியின் ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்டது. பாஸ்மதி அரிசியின் பெயரில் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியை சட்டத்திற்குப் புறம்பாக ஏற்றுமதி செய்வதைத் தடுக்க, கடந்த ஆகஸ்ட் 27ம் தேதியன்று கூடுதல் தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருக்கிறது மத்திய அரசு.
சிங்கப்பூருக்கு சிறப்பு ஏற்றுமதி:
உலகின் அனைத்து நாடுகளுக்கும் அரிசி ஏற்றுமதியை இந்தியா தடை செய்திருக்கும் நிலையில், சிங்கப்பூருக்கு மட்டும் ஏற்றுமதியை அனுமதிக்கவிருப்பதாக செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார் மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர். சிங்கப்பூருடன் இந்தியா நெருக்கமான உறவைப் பேணி வருவதாகவும், அதன் காரணமாக சிங்கப்பூரின் உணவுத் தேவையை பூர்த்தி செய்ய அரிசி ஏற்றுமதியை அந்நாட்டிற்கு மட்டும் அனுமதிக்கவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார் அவர். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர். சிங்கப்பூரின் அரிசித்தேவையில் 40%-தத்தை இந்தியாவில் இருந்தே இறக்குமதி செய்து வருகிறது அந்நாடு. மேலும், இந்தியாவிலிருந்து அந்நாடு இறக்குமதி செய்யும் அரிசியில் 17% பாஸ்மாதி அல்லாத அரிசி வகையைச் சேர்ந்தவை தான் என்பது குறிப்பிடத்தக்கது.