ஏப்ரல் 1 முதல் ஃபார்ம் 16-க்கு பதிலாக 'ஃபார்ம் 130' அறிமுகம்; வருமான வரி விதிகளில் புதிய சீர்திருத்தம்
செய்தி முன்னோட்டம்
பல தசாப்தங்களாக பயன்பாட்டில் இருந்த 'Form 16' சான்றிதழை நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக அதிக விவரங்கள் கொண்ட 'Form 130' என்ற புதிய படிவத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இது வரும் ஏப்ரல் 1, 2026 முதல் நடைமுறைக்கு வருகிறது. புதிய வருமான வரி விதிகள் 2026-ன் படி, இந்த 'ஃபார்ம் 130' மூன்று முக்கியப் பிரிவுகளைக் கொண்டிருக்கும்: 1. பிரிவு 1: வேலை வழங்குபவர் மற்றும் பணியாளரின் அடிப்படை விவரங்கள். 2. பிரிவு 2: மொத்த சம்பளம் மற்றும் அதிலிருந்து கழிக்கப்பட்ட வரி (TDS) குறித்த சுருக்கம். 3. பிரிவு 3: உங்கள் வரிக்குரிய வருமானம் எவ்வாறு கணக்கிடப்பட்டது, Exemptions, Deductions குறித்த முழுமையான விளக்கம் இதில் இருக்கும்.
மாற்றம்
யார் யாருக்கு இந்த மாற்றங்கள் செயல்படுத்தப்படும்?
சம்பளதாரர்கள்: இனி கையேடு (Manual) திருத்தங்களுக்கு இடமிருக்காது. அனைத்தும் சிஸ்டம் மூலம் சரிபார்க்கப்பட்ட தரவுகளாகவே இருக்கும். முதலீட்டாளர்கள்: மூலதன ஆதாயங்கள் (Capital Gains) குறித்த தகவல்களை மிகவும் துல்லியமாகத் தெரிவிக்க வேண்டியிருக்கும். மூத்த குடிமக்கள்: ஓய்வூதியம் மற்றும் வட்டி வருமானத்தைப் பதிவு செய்வது இனி எளிமையாக்கப்படும். வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRI): இவர்களுக்கான வருமான வெளிப்பாட்டு விதிகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளன.
காரணம்
ஏன் இந்த மாற்றம்?
வேலை வழங்குபவர் தாக்கல் செய்யும் டிடிஎஸ் (TDS) விவரங்களுக்கும், வரி செலுத்துவோர் தாக்கல் செய்யும் வருமான வரித் தாக்கலுக்கும் இடையே உள்ள முரண்பாடுகளைக் களைவதே இதன் முக்கிய நோக்கமாகும். 'ஃபார்ம் 130' இனி வருமான வரித் துறையின் TRACES இணையதளம் மூலமாக மட்டுமே உருவாக்கப்படும்; நிறுவனங்கள் இதனை சுயமாகத் தயாரிக்க முடியாது. இந்தத் தொழில்நுட்ப ரீதியான மாற்றம் வரி செலுத்தும் முறையை எளிதாக்கினாலும், சிறு பிழைகளுக்கும் இடமில்லாத வகையில் துல்லியமாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.