Loading...
வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி; டிசம்பர் 1 முதல் ஐசிஐசிஐ வங்கி சேவை கட்டணங்கள் உயர்வு
டிசம்பர் 1 முதல் ஐசிஐசிஐ வங்கி சேவை கட்டணங்கள் உயர்வு

வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி; டிசம்பர் 1 முதல் ஐசிஐசிஐ வங்கி சேவை கட்டணங்கள் உயர்வு

எழுதியவர் Sekar Chinnappan
Oct 22, 2026
05:23 pm

செய்தி முன்னோட்டம்

ஐசிஐசிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் சில குறிப்பிட்ட சேமிப்புக் கணக்கு சேவைக்கான கட்டணங்களை டிசம்பர் 1, 2026 முதல் உயர்த்துவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வங்கிக் கிளைகளில் மேற்கொள்ளப்படும் ரொக்கப் பண பரிவர்த்தனைகள் மற்றும் போதிய பணமில்லாமல் தோல்வியடையும் இசிஎஸ் / நாக் மின்னணு பணப் பரிவர்த்தனைகளுக்கான அபராதக் கட்டணங்கள் இந்த மாற்றத்தின் கீழ் உயர்த்தப்பட்டுள்ளன. இதனால் அடிக்கடி ரொக்கப் பரிமாற்றம் செய்பவர்களும், கடன் தவணை செலுத்துபவர்களும் புதிய கட்டண மாற்றங்களை அறிந்து கொள்வது அவசியமாகும்.

கட்டணங்களில் மாற்றங்கள்

ரொக்கப் பண பரிவர்த்தனைக் கட்டணங்களில் மாற்றங்கள்

புதிய விதிகளின்படி, வாடிக்கையாளர்கள் வழக்கம்போல மாதத்திற்கு 3 முறை இலவசமாக ரொக்க வைப்பு மற்றும் வாபஸ் செய்துகொள்ளலாம்.

மேலும், மாதத்திற்கு ₹1 லட்சம் வரையிலான பரிவர்த்தனைகளுக்குக் கூடுதல் கட்டணம் கிடையாது.

ஆனால், இந்த இலவச வரம்பைக் கடந்த பிறகு, ஒவ்வொரு ₹1,000 பரிவர்த்தனைக்கும் இதுவரை வசூலிக்கப்பட்ட ₹3.50 கட்டணம் இனி ₹4.00 ஆக உயர்த்தப்படும்.

பரிவர்த்தனை எண்ணிக்கை மற்றும் மதிப்பு ஆகிய இரண்டின் வரம்பையும் தாண்டினால், எது அதிகமோ அந்த புதியக் கட்டணம் வசூலிக்கப்படும்.

அபராதம்

தோல்வியடையும் இசிஎஸ் மற்றும் நாக் பரிவர்த்தனைகளுக்கான அபராதம்

வங்கி கணக்கில் போதிய இருப்புத் தொகை இல்லாத காரணத்தால் கடன் இஎம்ஐ மற்றும் இதர தானியங்கி கட்டணப் பிடித்தங்கள் நிராகரிக்கப்பட்டால் வசூலிக்கப்படும் அபராதத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

முதல்முறை பரிவர்த்தனை தோல்வியடைந்தால் பழையபடியே ₹500 கட்டணமாக வசூலிக்கப்படும்.

ஆனால், அதே மாண்டேட் கீழ் இரண்டாவது மற்றும் மூன்றாவது முறை பரிவர்த்தனை தோல்வியடைந்தால், அபராதத் தொகை ₹500-லிருந்து ₹550 ஆக உயர்த்தப்படும்.

ஒரு மாதத்தில் அதிகபட்சமாக 3 முறை வரை இந்த அபராதம் வசூலிக்கப்படலாம்.

ADVERTISEMENT

அடிப்படை சேமிப்புக் கணக்கு

அடிப்படை சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு

பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா உள்ளிட்ட அடிப்படை சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ரொக்கப் பரிவர்த்தனைகளுக்கான கட்டணத்தில் விலக்குத் தொடரும் என்ற போதிலும், இசிஎஸ் / நாக் பரிவர்த்தனைகள் தோல்வியடையும் பட்சத்தில் உயர்த்தப்பட்ட புதிய அபராதக் கட்டணம் அவர்களுக்கும் பொருந்தும்.

எனவே, அனைத்து வகை சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்களும் தங்களின் கணக்கு வகைக்கு ஏற்ப கட்டண விவரங்களை சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

டிசம்பர் 1 முதல் அமலுக்கு வரும் இந்த கட்டணங்களுடன் வரிகளும் தனியாக சேர்க்கப்படும்.

ADVERTISEMENT