மாதம் ரூ.10,000 முதலீடு செய்தால் 21 ஆண்டுகளில் ரூ.2.1 கோடி ஈட்ட வாய்ப்பு
நீண்ட கால முதலீடுகளில் முக்கியமான இடம் மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு உண்டு. பங்குச்சந்தையைப் பற்றிய பெரிய அறிமுகம் இல்லாதவர்கள் கூட மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாம். எனினும், ஒரு குறிப்பிட்ட மியூச்சுவல் ஃபண்டு திட்டத்தில் முதலீடு செய்யும் முன்னர், அந்த மியூச்சுவல் ஃபண்டு திட்டத்தை பராமரிக்கும் நிறுவனம் குறித்தும், அந்தக் குறிப்பிட்ட மியூச்சுவல் ஃபண்டு திட்டம் கடந்த காலத்தில் எவ்வளவு லாபம் அளித்திருக்கிறது என்பது குறித்தும் தெரிந்து கொண்டு முதலீடு செய்வதே சிறந்தது. சிறந்த லாபம் கொடுத்திருக்கும் ஐசிஐசிஐ ப்ருடென்ஷியல் மல்டி அசட் ஃபண்டானது, தொடங்கப்பட்டு 21 ஆண்டு காலத்தை நிறைவு செய்திருக்கும் நிலையில், இந்தக் காலக்கட்டத்தில் எவ்வளவு லாபம் அளித்திருக்கிறது என்பதைப் பார்க்கலாம்.
ஐசிஐசிஐ ப்ருடென்ஷியல் மல்டி அசட் ஃபண்டு:
சுமார் ரூ.24,060 கோடி AUM-ஐ கொண்டிருக்கும் இந்த மியூச்சுவல் ஃபண்டு திட்டத்தில் 57% மல்டி அசட் பிரிவிலேயே முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. 2002, அக்டோபர் 31ம் தேதி தொடங்கப்பட்ட இந்த மியூச்சுவல் ஃபண்டு திட்டமானது, கடந்த 2023, அக்போடர் 31ம் தேதியுடன் 21 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. இந்தத் மியூச்சுவல் ஃபண்டு திட்டம் தொடங்கப்பட்ட போது லம்ப் சம்மாக ரூ.1 லட்சத்தை இதில் முதலீடு செய்திருந்தீர்கள் என்றால், நடப்பு ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி நிலவரப்படி 21% CAGR விகிதத்தில் அந்தத் தொகை, ரூ.54.9 லட்சமாக பெருகியிருக்கும்.
SIP முறையில் முதலீடு செய்திருந்தால்..?
அதேபோல், மேற்குறிப்பிட்ட திட்டத்தில் லம்ப் சம்மாக இல்லாமல் SIP முறையில் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து ஒவ்வொரு மாதமும் ரூ.10,000 முதலீடு செய்து வந்திருந்தால் முதல் ஒரு வருடத்தில் ரூ.1.34 லட்சமாகப் பெருகியிருக்கும். அந்த ஓராண்டு காலத்தில் ரூ.1.2 லட்சம் முதலீடாகச் செய்திருப்போம். மூன்று வருட காலத்தில் ரூ.3.6 லட்சம் முதலீட்டிற்கு, ரூ.4.94 லட்சமாகவும், ஐந்து வருட காலத்தில் ரூ.6 லட்சம் SIP முதலீடானது ரூ.10 லட்சமாகவும் பெருகியிருக்கும். மேலும், 15 வருட காலத்தில் ரூ.18 லட்சம் முதலீடானது ரூ.64.5 லட்சமாகவும், தற்போது வரை ரூ.25.2 லட்சம் வரையிலான முதலீடானது 17.5% CAGR விகிதத்தில் ரூ.2.1 கோடியாகப் பெருகியிருக்கும்.