விவசாயத் துறைக்கு வரி விலக்கு: விதைகளின் சேமிப்பு மற்றும் டிராக்டர் டயர்களுக்கான ஜிஎஸ்டி குறைகிறது
செய்தி முன்னோட்டம்
விவசாயத் துறையின் நிதி சுமையைக் குறைக்கும் வகையில், அக்டோபர் 8 ஆம் தேதி நடைபெறவுள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விதை சேமிப்பு கிடங்கு வசதிகள் மற்றும் டிராக்டர் டயர்களுக்கான ஜிஎஸ்டி வரியைக் குறைக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. விதை நிறுவனங்கள் மற்றும் விவசாயிகளின் உற்பத்தி செலவை குறைக்கும் பொருட்டு, விதைத்தல் பணிகளுக்காக பயன்படுத்தப்படும் விதைகளைச் சேமித்து வைப்பதற்கும், கிடங்குகளில் பராமரிப்பதற்கும் ஜிஎஸ்டி வரியிலிருந்து முழு விலக்கு அளிக்க முன்மொழியப்பட்டுள்ளது. விதைகளை வரிசைப்படுத்துதல், சுத்திகரித்தல் மற்றும் பொட்டலமிடுதல் போன்ற செயல்முறைகள் இனி விதை சேமிப்பு வரி விலக்கை பாதிக்கும் காரணியாக இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரி குறைப்பு
டிராக்டர் டயர்களுக்கான வரி குறைப்பு
விவசாய உபகரணங்களின் பராமரிப்பு செலவை குறைக்கும் நோக்கில், ரீட்ரெட் செய்யப்பட்ட டிராக்டர் டயர்களுக்கான ஜிஎஸ்டி வரியை தற்போதைய 18%ல் இருந்து 5%மாக குறைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இது சிறு மற்றும் குறு விவசாயிகளுக்குப் பெரும் நிவாரணமாக அமையும்.
1985ஆம் ஆண்டின் உரக் கட்டுப்பாட்டு உத்தரவின்கீழ் பதிவு செய்யப்பட்ட கடற்பாசி சார்ந்த பயிர் ஊக்குவிப்பான்களுக்கான வரியை சீராக 5 சதவீதமாக மாற்ற ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு செய்துள்ளது.
மேலும், சிறிய அளவிலான விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் ஈசப்கோல் விதைகளுக்கு 0% என்ற புதிய தனிப் பிரிவின் கீழ் வரி விலக்கு அளிக்கப்பட உள்ளது.
இந்தத் திருத்தங்கள் அமலுக்கு வரும் பட்சத்தில், பயிர் உற்பத்திச் செலவுகள் கணிசமாகக் குறைவதோடு, விவசாயப் பொருட்களின் சந்தைப்படுத்துதலும் சுலபமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.