வரி ஏய்ப்பு செய்யும் ஆன்லைன் கேமிங் நிறுவனங்களின் சேவைகளை முடக்க நடவடிக்கை?
ஆன்லைன் கேமிங், குதிரைப் பந்தயம் மற்றும் சூதாட்ட விடுதிகளின் மீது 28% சரக்கு மற்றும் சேவை வரி (GST) விதிக்க, கடந்த ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருந்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். மேற்கூறிய துறைகள் யாவும் அடிப்படை சேவைகள் இல்லாமல், சொகுசு சேவைகளாக கருதப்படும் காரணத்தால் அதன் மீது அதிகபட்ச ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், ஆன்லைன் கேமிங் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள், வெளிநாடுகளில் இருந்து செயல்படுதன் மூலம் ஜிஎஸ்டி வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகக் கருத்துகள் எழுப்பப்பட்டிருக்கின்றன.
வரி ஏய்ப்பு செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை:
ஒருவேளை குறிப்பிட்ட ஆன்லைன் கேமிங் அல்லது சூதாட்ட நிறுவனம் வெளிநாட்டில் இருந்து செயல்படும் பட்சத்தில், இந்தியாவில் இருந்து அந்தக் குறிப்பிட்ட நிறுவனத்திற்கு செய்யப்படும் கட்டண மூலத்திலிருந்து, ஜிஎஸ்டி வரிப் பிடித்தம் செய்யத் திட்டமிடப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த வருவாயில் இருந்து வரிப்பிடித்தம் செய்யாமல், கட்டண மூலத்திலிருந்து வரிப்பிடித்தம் செய்வது வரி பிடித்தம் செய்யும் செயல்பாட்டையும் எளிமையாக்கும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும், வரும் புதன்கிழமை நடைபெறவிருக்கும் அடுத்த கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டு, ஜூலை 11ம் தேதி எடுக்கப்பட்ட முடிவை நடைமுறைப்படுத்துவதற்கு சட்டத்தில் தேவையான மாற்றங்கள் கொண்டு வர திட்டமிட்டிருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார். தேவைப்படும் பட்சத்தில் வரிச் சட்டங்களுடன் ஒத்துழைக்காத நிறுவனங்களின் செயல்பாடுகளை இந்தியாவில் முடக்கியும் நடவடிக்கை மேற்கொள்ளும் அதிகாரம் வழங்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.