முத்ரா திட்டத்தின் கடன் வரம்பு இரண்டு மடங்காக உயர்வு; மத்திய அரசு அறிவிப்பு
இந்தியாவில் தொழில் முனைவோருக்கு ஆதரவாக, பிரதான் மந்திரி முத்ரா யோஜனா (PMMY) கீழ் கடன் வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை, நிதி அமைச்சகம் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 25) வெளியிட்ட அறிக்கையின்படி, நிதி வசதி அற்றவர்களுக்கு நிதி வழங்குதல் என்ற திட்டத்தின் நோக்கத்தை மேலும் வலுப்படுத்துகிறது. முன்னதாக, 2024-25 ஒன்றிய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த உயர்வை அறிவித்த நிலையில், தற்போது அமலுக்கு வந்துள்ளது. இதன் கீழ், தருண் பிரிவில் கடன் பெற்றவர்கள், உரிய முறையில் கடனை திருப்பிச் செலுத்திய பின்னர், ரூ. 20 லட்சம் வரை கடன் பெற இந்த திட்டத்தால் உதவியாக இருக்கும் என அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
புதிதாக தருண் பிளஸ் பிரிவு தொடக்கம்
கடன் தொகை இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், இதற்காக தருண் பிளஸ் என்ற புதிய பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரூ.10 லட்சம் முதல் ரூ. 20 லட்சம் வரை கடன் பெறவும், முந்தைய தருண் கடன்களை சரியாக திருப்பிச் செலுத்திய தொழில் முனைவோர்களும் இந்த பிரிவிற்கு தகுதியானவர்களாக அறிவிக்கப்படுவார்கள். இந்த கடன்கள் அனைத்தும் மைக்ரோ யூனிட்களுக்கான (CGFMU) கடன் உத்தரவாத நிதியின் கீழ் காப்பீடு செய்யப்படும். முன்னதாக, 2015இல் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிய PMMY, நிறுவனம் சாராத சிறு, குறு தொழில்களுக்கு ரூ.10 லட்சம் வரை அடமானமின்றி கடன் வழங்குவதை நோக்கமாகக் கொண்டது. சிசு, கிஷோர் மற்றும் தருண் என மூன்று பிரிவுகளில் இந்த கடன்கள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.