புதிய தொழிற்சாலை அமைக்க தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட கோத்ரெஜ்
தமிழகத்தில் புதிய தொழிற்சாலை ஒன்றை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை தமிழக அரசுடன் இணைந்து கையெழுத்திட்டிருப்பதாக அறிவித்திருக்கிறது நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான கோத்ரெஜ். அதன் படி, சென்னையை அடுத்திருக்கும் செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் தாலுகாவில் புதிய தொழிற்சாலை ஒன்றை நிறுவி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.515 கோடி முதலீடு செய்யவிருப்பதாக தெரிவித்திருக்கிறது அந்நிறுவனம். இந்தப் புதிய தொழிற்சாலையின் மூலம் 400 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவிருப்பதாக அறிவித்திருக்கும் கோத்ரெஜ், இந்தத் தொழிற்சாலையில் 50% பெண்களையும், 5% மாற்றுத் திறனாளிகள் மற்றும் LGBTQ-வினரையும் பணியில் அமர்த்தத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் அந்நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் நிசாபா கோத்ரெஜ்.
கோத்ரெஜின் பசுமைத் தொழிற்சாலை:
இந்திய பசுமைக் கட்டிட மன்றம் மற்றும் Leadership in Enery and Environmental Design ஆகியவற்றின் சான்றிதழ் பெற்ற கட்டிடங்களையே புதிய தொழிற்சாலைக்காகக் கட்டவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது கோத்ரெஜ் நிறுவனம். இந்தப் புதிய தொழிற்சாலையில் ஆற்றல் திறன் வாய்ந்த தொழில்நுட்பங்கள், குப்பைகளைக் குறைக்கும் திட்டங்கள், சோலார் தகடுகள் மற்றும் ZLD ஆகிய திட்டங்களை மேற்கொள்ளவிருப்பதாக குறிப்பிட்டிருக்கிறது அந்நிறுவனம். பல்வேறு விதமான நுகர்வோர் பயன்பாட்டுப் பொருட்களை இந்தத் தொழிற்சாலையில் தயாரிக்கவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் நிசாபா கோத்ரெஜ். அந்நிறுவனத்தின் முன்னணி நுகர்வோர் பயன்பாட்டுப் பொருட்களான, சின்தால், கோத்ரெஜ் எக்ஸ்பர்ட் ரிச் க்ரீம், கோத்ரெஜ் ஷாம்பு ஹேர் கலர் மற்றும் குட்நைட் ஆகிய தயாரிப்புகளை புதிய தொழிற்சாலையில் தயாரிக்கத் திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம்.