ஏற்றத்தில் அதானி குழுமப் பங்குகள்; உயர்ந்த கவுதம் அதானியின் சொத்து மதிப்பு
கடந்த நவம்பர் 28ம் தேதி முதல் இந்தியப் பங்குச்சந்தைகளில் அதானி குழும நிறுவனத்தின் பங்குகள் தொடர்ந்து உயர்வைச் சந்தித்து வருகின்றன. இதனைத் தொடர்ந்து கவுதம் அதானியின் சொத்து மதிப்பு 5.6 பில்லியன் டாலர்கள் வரை உயர்ந்திருக்கிறது. தற்போது உலகளவில் 65.8 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடன், 20வது இடத்தில் இடம்பெற்றிருக்கிறார் கவுதம் அதானி. மேலும், நேற்று மூன்று மாநில தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றதையடுத்து, இன்று (டிசம்பர் 4) இந்திய பங்குச்சந்தைக் குறியீடுகள் புதிய உச்சத்தை எட்டின. அதே போல், அதானி குழும பங்களும் அதிகபட்சமாக 15% வரை ஏற்றத்தைச் சந்தித்திருக்கின்றன.
அதானி - ஹின்டன்பர்க் பிரச்சினை:
இந்த ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆராய்ச்சி நிறுவனமான ஹின்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம், அதானி குழுமம் மீதான அறிக்கை ஒன்றை வெளியிட்டதைத் தொடர்ந்து, அந்நிறுவனத்தின் பங்குகள் கடும் வீழ்ச்சியைச் சந்தித்தன. இதனால் 55 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்பை இழந்ததோடு, உலகின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் இருந்தும் நீக்கப்பட்டார் அவர். இதனைத் தொடர்ந்து அதானி குழுமத்தின் மீதான விசாரணைக்குக் கோரி வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், அந்த வழக்கு விசாரணை கடந்த வாரம் முடிவடைந்தது. இந்த வழக்கில் அதானி குழுமத்திற்கு சாதகமான தீர்ப்பே எதிர்பார்க்கப்படும் நிலையில், அக்குழுமப் பங்குகள் ஏற்றத்தில் இருக்கின்றன. தற்போது தேர்தல் முடிவுகளும் அதற்கு கூடுதல் வலுசேர்த்திருக்கிறது.
உயர்வைச் சந்தித்து வரும் அதானி குழுமப் பங்குகள்:
இன்று காலை வர்த்தகம் தொடங்கியவுடன் 10% வரை ஏற்றம் கண்டது அதானி எண்டர்பிரைசஸ் பங்கு. தற்போது 3 மணி நிலவரப்படி சற்று இறக்கம் கண்டு, மொத்தமாக 7.33% ஏற்றத்துடன் ரூ.2,536 என்ற விலையில் வர்த்தகமாகி வருகிறது. அதே போல், அதானி க்ரீன் எனர்ஜி நிறுவனப் பங்குகள் இன்று காலை வர்த்தகம் தொடங்கிவுடன் 15% வரை ஏற்றம் கண்ட நிலையில், 3 மணி நிலவரப்படி 9.16% ஏற்றத்துடன் ரூ.1,120.55 என்ற விலையில் வர்த்தகமாகி வருகின்றது. அதானி பவர் நிறுவனப் பங்குகள் இன்றைய வர்த்தக நாளில், 3 மணி நிலவரப்படி 5.59% ஏற்றம் கண்டு ரூ.465 என்ற விலையில் வர்த்தகமாகி வருகிறது.