உலகின் 6வது பணக்காரராக இருந்து கடனில் சிக்கிய அனில் அம்பானி.. எப்படி?
2002ம் ஆண்டு ரிலையன்ஸ் குழுமத்தின் நிறுவனர் திருபாய் அம்பானியின் மறைவையடுத்து, அவரது 1500 கோடி டாலர் மதிப்பிலான ரிலையன்ஸ் வணிகமானது, முகேஷ் அம்பானி மற்றும் அனில் அம்பானிக்கு இடையே சமமாகப் பிரித்துக் கொடுக்கப்பட்டது. இன்று உலகின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி நீடித்திருக்க, அனில் அம்பானியோ தனது மொத்தச் சொத்தையும் இழந்து கடனில் தத்தளித்துக் கொண்டிருக்கிறார். என்ன நடந்தது? 2002ம் ஆண்டு சொத்துக்கள் பிரித்துக் கொடுக்கப்பட்ட பிறகு சிறப்பாகவே தன்னுடைய தனிப்பட்ட வர்த்தக ராஜ்ஜியத்தைத் தொடங்கினார் அனில் அம்பானி. இன்னும் சொல்லப் போனால், தொடக்க காலத்தில் முகேஷ் அம்பானியை விட அனில் அம்பானியே ரிலையன்ஸ் வர்த்தகத்தில் கொடி கட்டிப் பறந்தார்.
வளர்ந்த வேகத்தில் வீழ்ச்சி:
1500 கோடி டாலர் மதிப்புடைய சொத்து இரண்டாகப் பிரிக்கப்பட்ட கொடுக்கப்பட்ட பிறகு, 2008ம் ஆண்டு தனக்கு கொடுக்கப்பட்ட பாதியை 4,200 கோடி டாலராக உயர்த்தி உலக பணக்காரர்கள் பட்டியலில் 6வது இடம் பிடித்தார் அனில் அம்பானி. ஆனால், அதன் பின் அவர் மேற்கொண்ட தவறான முதலீட்டு முடிவுகளும், வர்த்தகத்திற்காக முறையற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அவர் மீது சாட்டப்பட்ட குற்றங்களுமே அவருடைய வீழ்ச்சிக்கு வித்திட்டன. தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த எம்டிஎன் நிறுவனத்தில் 200 கோடி டாலர்கள் முதலீடு செய்திருந்தார் அனில் அம்பானி. அந்த முதலீடு தவறான திசையில் செல்ல, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் கடனில் வீழ்ந்தது. அதன் பின்னான முகேஷ் அம்பானியின் ஜியோவின் எழுச்சி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷனை அடியோடு அமுக்கிப் போட்டது.
நகையை விற்று கட்டணம் வேண்டிய நிலை:
தவறான மூதலீடுகள் மட்டுமின்றி பல்வேறு நிதி முறைகேடுகளிலும் அணில் அம்பானியின் பெயர் அடிபட்டது. இதனைத் தொடர்ந்து 2008ம் ஆண்டு 4,200 கோடி டாலர்களாக இருந்த அணில் அம்பானியின் சொத்து மதிப்பு, பத்தே ஆண்டுகளில் 170 கோடி டாலராக சுருங்கிப் போனது. 2020ம் ஆண்டு தான் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல், தன்னுடைய நிறுவனம் திவாலானதாக அறிவித்தார். மேலும், தன் மீதான சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள தன்னுடைய குடும்பத்தினரின் நகைகளை விற்று கட்டணங்களைச் செலுத்தியதாகவும் குறிப்பிட்டிருக்கிறார் அவர். தற்போது அனில் அம்பானியின் தலைமையிலான நிறுவனங்கள் ரூ.40,000 கோடிக்கும் மேல் கடனைக் கொண்டிருக்கின்றன.