பணவீக்கம் உலகளவில் உள்ள குழந்தைகளை எவ்வாறு பாதிக்கிறது?
உலகெங்கிலும் உள்ள நாடுகளின் பொருளாதாரங்களை பணவீக்கம் தொடர்ந்து அச்சுறுத்தி வரும் நிலையில், பணவீக்கம் குழந்தைகளை எந்த அளவு பாதிக்கிறது என்பதை ஒரு சமீபத்திய ஆய்வு வெளிக்கொணர்ந்துள்ளது. உலக விஷன் இன்டர்நேஷனல் என்ற மனிதாபிமான குழுவால் 16 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வு, பணவீக்கத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் ஆபத்துகளை பட்டியலிட்டுள்ளது. இந்த ஆய்வில் கலந்து கொண்ட பெற்றோர்களில் குறைந்தது 59 சதவீதம் பேர், பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் தங்கள் குழந்தைகள் வாடுவதாக தெரிவித்துள்ளனர். 46 சதவீதம் பேர் உணவுக்கு போதுமான பணம் சம்பாதிக்க முடியுமா என்பது குறித்த கவலைகளை தெரிவித்துள்ளனர். மேலும், 37 சதவீத பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தினசரி சரியான ஊட்டச்சத்து கிடைப்பதில்லை என்று கூறியுள்ளனர்.
38 சதவீத குழந்தைகள் பசியுடன் படுக்கைக்குச் செல்கின்றனர்
அந்த ஆய்வில் கலந்து கொண்ட 21% பேர் கடந்த மாதம் தங்கள் குழந்தைகள் பட்டினியால் அவதிப்பட்டதாக தெரிவித்துள்ளனர். குறைந்த வருமானம் உள்ள நாடுகளில் பசியுடன் படுக்கைக்குச் செல்லும் குழந்தைகளின் சதவீதம் 38 சதவீதமாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உலகளவில் மிகப் பெரிய பொருளாதாரமான அமெரிக்காவில் கூட, 18% பெற்றோர்கள் தங்கள் குழந்தை ஒருமுறையாவது பசியுடன் படுக்கைக்குச் சென்றிருக்கிறது என்பதை ஒப்புக்கொண்டுள்ளனர். இந்த ஆய்வில் கலந்து கொண்டவர்களில் 46 சதவீதம் பேர், தங்கள் குழந்தை பசியுடன் படுக்கைக்கு செல்வதற்கு பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு ஆகியவையே முதன்மைக் காரணங்கள் என்று கூறுகின்றனர். குறைந்த குடும்ப வருமானம்(39%) மற்றும் பசியை எதிர்த்துப் போராடுவதில் அரசாங்க கவனம் இல்லாதது(25%) ஆகியவை அதற்கு அடுத்த காரணங்களாக இருக்கின்றன.