$26.5 டிரில்லியன் பொருளாதார இலக்கு: 15 நிதித்துறை சீர்திருத்தங்களை CII முன்மொழிவு
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் நீண்டகால பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்தும் வகையில் இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (CII) பதினைந்து முக்கிய நிதித்துறை சீர்திருத்தங்களை முன்மொழிந்துள்ளது. மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான வங்கித் துறை உயர்மட்டக் குழுவிடம் இந்த பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. 2047 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவை 26.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்த நாட்டின் நிதி சொத்துக்கள் 106 டிரில்லியன் டாலராக விரிவடைய வேண்டும் என கூட்டமைப்பு மதிப்பிட்டுள்ளது.
கடன் வசூல் வரம்பு
NBFC நிறுவனங்களுக்கு நிரந்தர பணப்புழக்க வசதி மற்றும் SARFAESI கடன் வசூல் வரம்பு குறைப்பு
நல்ல நிர்வாகம் கொண்ட வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு விதி அடிப்படையிலான நிரந்தர பணப்புழக்க மற்றும் மறு நிதியளிப்பு வசதியை உருவாக்க CII பரிந்துரைத்துள்ளது.
மேலும் SARFAESI சட்டத்தின் கீழ் NBFC நிறுவனங்களுக்கான குறைந்தபட்சக் கடன் வசூல் வரம்பை இருபது லட்சம் ரூபாயிலிருந்து ஒரு லட்சம் ரூபாயாகக் குறைக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
தனியார் வங்கிகளில் வாக்குரிமை வரம்பை 49 சதவீதமாகவும் பொதுத்துறை வங்கிகளில் அந்நிய முதலீட்டு வரம்பை 49 சதவீதமாகவும் உயர்த்தவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி சலுகை
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கடன் வரம்பு ₹100 கோடியாக உயர்வு மற்றும் தனிநபர் காப்பீட்டுக்கு ஜிஎஸ்டி சலுகை
முன்னுரிமை துறைக் கடன் வரம்பில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்கான கடன் உச்சவரம்பை முப்பத்தைந்து கோடியிலிருந்து நூறு கோடி ரூபாயாக உயர்த்த இந்திய தொழில்துறை கூட்டமைப்பு பரிந்துரைத்துள்ளது.
அதோடு மறுசுழற்சி மற்றும் பேட்டரி மறுபயன்பாடு ஆகிய செயல்பாடுகளையும் முன்னுரிமைத் துறை கடன் கட்டமைப்பிற்குள் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
காப்பீட்டுத் துறையில் தனிநபர் மருத்துவ மற்றும் ஆயுள் காப்பீடுகளுக்கு ஜிஎஸ்டி உள்ளீட்டு வரி வரவை மீண்டும் வழங்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.
பரிந்துரை
நில ஆவணங்கள் மற்றும் ரேஷன் கார்டு தரவுகளை Account Aggregator கட்டமைப்பில் இணைக்கப் பரிந்துரை
வாடிக்கையாளர்களின் ஒப்புதலுடன் நில ஆவணங்கள், இ-மண்டி பரிவர்த்தனைகள், ஊரக வேலைவாய்ப்பு திட்ட பதிவுகள் மற்றும் ரேஷன் கார்டு தகவல்களை அக்கவுண்ட் அக்ரிகேட்டர் அமைப்பில் இணைக்க CII முன்மொழிந்துள்ளது.
சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில்களின் கடன் பற்றாக்குறையைச் சமாளிக்க அரசு உத்தரவாதக் கடன்களுடன் தீ மற்றும் வெள்ளக் காப்பீட்டை இணைக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும் சான்றளிக்கப்பட்ட வீடியோ அடிப்படையிலான KYC முறையை அனுமதிக்க வேண்டும் எனவும் இந்திய தொழில்துறை கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.