குவாண்டம் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கு ரூ.6,000 கோடி.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் குவாண்டம் தொழில்நுட்ப கட்டமைப்பை உருவாக்குவதற்கான தேசிய குவாண்டம் திட்டத்திற்கு (National Quantum Mission) மத்திய அமைச்சரவை ஒப்பதல் அளித்திருக்கிறது.
சுமார் 6,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2023-24 முதல் 2030-31-ம் ஆண்டு வரை குவாண்டம் தொழில்நுட்ப கட்டமைப்பை உருவாக்குவதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது.
கடந்த 2020-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையிலேயே குவாண்டம் தொழில்நுட்பத்திற்காக 8000 கோடி ரூபாயை ஒதுக்கப்படும் என அறிவித்திருந்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இரண்டு வருட தாமதத்திற்குப் பிறகு குவாண்டம் தொழில்நுட்பத்திற்கான திட்டங்களுக்கு தற்போது அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது.
இந்தத் திட்டத்தை இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை செயல்படுத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து குவாண்டம் தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் திறனை மேம்படுத்தும் நாடுகள் பட்டியலில் 7-வதாக இணைந்திருக்கிறது இந்தியா.
இந்தியா
குவாண்டம் தொழில்நுட்பம் என்றால் என்ன?
தற்போது நாம் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை விட வேகமாகவும், பாதுகாப்பாகவும் அதீத திறைனுடைய தொழில்நுட்பத்தையே குவாண்டம் தொழில்நுட்பம் என்கிறோம். இந்தக் குவாண்டம் தொழில்நுட்பத்தின் கீழ் வருபவை அனைத்தும் குவாண்டம் இயக்கவியல் கொள்கையின் அடிப்படையில் இயங்குபவை.
ஒரு அதிசிறந்த சூப்பர்கம்யூட்டர் 10,000 ஆண்டுகள் எடுத்துக் கொண்டு செய்யும் வேலையை, 2019-ல் குவாண்டம் கணினி ஒன்று 200 நொடிகளில் செய்து முடித்ததாக கூகுள் நிறுவனம் தெரிவித்தது.
இந்த குவாண்டம் தொழில்நுட்பத்தை கம்ப்யூட்டிங் முதல் தகவல் தொடர்பு வரை பல துறைகளில் பயன்படுத்த முடியும்.
அடுத்த மூன்று ஆண்டுகளில், பாதுகாப்பான மற்றும் வேகமான தகவல் தொடர்பு வசதியை அளிக்க 2,000 கிமீ-களுக்கு குவாண்டம் நெட்வொர்க் அமைக்கப்படும் என தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்திருக்கிறார்.