பட்ஜெட் 2024: எந்தெந்த துறைகளின் பங்குகள் உயரும்
மக்களவை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆரம்பத்தில் பின்னடைவு சந்தித்த பங்குச்சந்தை, அதன் பிறகு நன்றாக வார்ச்சியடைந்து வருகிறது. சென்செக்ஸ் ஏற்கனவே 81,000 புள்ளிகளைத் தாண்டியுள்ளது. மேலும் நிஃப்டியும் 25,000 ஐ நெருங்கியுள்ளது. வரவிருக்கும் பட்ஜெட், பங்குச்சந்தையின் உயர்வை மேலும் நீட்டிக்க உதவும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். அரசாங்கம், மூலதனச் செலவினத்தை (கேபெக்ஸ்) அதிகரிக்கும் என்றும், கொள்கை தொடர்ச்சியை பராமரிக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளதால், பங்குச் சந்தையின் சில துறைகள் அதிக பலன்களைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் பாதுகாப்பு, உள்கட்டமைப்பு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின்(PSUs) பங்குகள் அதிகம் இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
பொதுத்துறை, பாதுகாப்புத்துறை மற்றும் ரயில்வேக்கு முக்கியத்துவம்
மேற்கூறிய துறைகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடுகள் செய்யப்படும் என்றும், கொள்கை தொடர்ச்சி இருக்கும் என்றும் பங்குசந்தை நிபுணர்கள் கூறியுள்ளனர். உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதிலும், இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதிலும், பாதுகாப்புத் துறையில் உள்ளூர் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதிலும் அரசாங்கம் கவனம் செலுத்தும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். பொதுத்துறை நிறுவனங்களின் நிதி நிலைத்தன்மையையும் செயல்பாட்டுத் திறனையும் மேம்படுத்துவதற்காக, மூலதன மறுகட்டமைப்புக்கு முன்னுரிமை அளிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. கொள்கை தொடர்ச்சியின் ஒரு பகுதியாக, கூடுதல் ரயில்களை சேர்த்து, தற்போதுள்ள உள்கட்டமைப்பை நவீனமயமாக்குவதற்கான கூடுதல் திட்டங்களை அரசாங்கம் அறிமுகப்படுத்தும். தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல், பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துதல் ஆகியவை இதில் அடங்கும்