
தங்களது சேவையின் பெயரை 'பாரத் டார்ட்' என மாற்றிய ப்ளூ டார்ட் நிறுவனம்!
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற மத்திய அரசு திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இந்தியாவில் லாஜிஸ்டிக்ஸ் துறையில் இயங்கி வரும் ப்ளூ டார்ட் (Blue Dart) நிறுவனம், தங்களுடைய ப்ரீமியம் சேவையான டார்ட் ப்ளஸ்ஸின் பெயரை பாரத் ப்ளஸ் என மாற்றியிருக்கிறது.
இந்தப் புதிய பெயர் மாற்றமானது, தங்களுடைய சேவைப் பயணத்தில் புதிய மைல்கல்லாக இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கும் அந்நிறுவனம், உலகை பாரத்துடனும், பாரத்தை உலகத்துடனும் இணைத்து தொடர்ந்து சேவை வழங்கப்போவதாகவும் தங்களுடைய அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.
தங்களுடைய ப்ரீமியம் சேவையின் பெயரை மட்டுமின்றி, தங்களுடைய நிறுவனத்தின் பெயரையும் பாரத் டார்ட் என அந்நிறுவனம் மாற்றலாம் எனவும் கூறப்படுகிறது. ஆனால், அதுகுறித்து அந்நிறுவனம் எந்தத் தகவலும் வெளியிடவில்லை.
இந்தியா
பாரத் எனப் பெயர் மாற்றம் செய்யப்படுகிறதா இந்தியா?
கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தியாவின் தலைநகரான புதுடெல்லியில் G20 மாநாடு நடைபெற்று முடிந்தது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட உலகத் தலைவர்களுக்குக் கொடுக்கப்பட்ட அழைப்பிதழில் இந்தியா என்பதற்குப் பதிலாக பாரத் என அச்சிட்டிருந்தது மத்திய அரசு.
அதேபோல், மாநாட்டில் நரேந்திர மோடிக்கு வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையிலும் இந்தியா என்ற பெயருக்குப் பதிலாக பாரத் என்ற பெயரே இடம் பெற்றிருந்தது.
வரும் செப்டம்பர் 18ம் தேதி தொடங்கவிருக்கும் பாராளுமன்ற சிறப்பு அமர்வில், இந்தியாவில் பெயைர பாரத் என மாற்றுவது குறித்த விஷயங்களை முன்னெடுத்துச் செல்ல மத்திய அரசு நடவடிக்கைகளை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகக் கூறப்படுகிறது.