Loading...
ஆப்பிள் நிறுவனத்தில் மீண்டும் ஆட்குறைப்பு: Fitness+ பிரிவில் ஊழியர்கள் நீக்கம்
ஆப்பிள் நிறுவனத்தில் மீண்டும் அதிரடி ஆட்குறைப்பு

ஆப்பிள் நிறுவனத்தில் மீண்டும் ஆட்குறைப்பு: Fitness+ பிரிவில் ஊழியர்கள் நீக்கம்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 21, 2026
11:31 am

செய்தி முன்னோட்டம்

உலக அளவில் தகவல் தொழில்நுட்பத் துறை சவாலான சூழலை சந்தித்து வரும் நிலையில், முன்னணி நிறுவனங்கள் பலவும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்த வரிசையில் உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், இரண்டு மாத இடைவெளியில் இரண்டாவது முறையாக ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ப்ளூம்பெர்க் வெளியிட்ட அறிக்கையின்படி, ஆப்பிள் நிறுவனம் தனது உடற்பயிற்சி சேவையான 'Fitness+' குழுவில் உள்ள ஒருசில ஊழியர்களை கடந்த வாரம் பணிநீக்கம் செய்துள்ளது. குறிப்பாக ஆப்பிள் வாட்ச் பயனர்கள் பார்க்கும் அம்சம் கொண்ட 'Time to Walk' மற்றும் 'Time to Run' போன்ற ஆடியோ உள்ளடக்கங்களை உருவாக்கும் பிரிவில் பணிபுரிந்த ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பணிநீக்கம்

ஆகஸ்ட் மாத பணிநீக்கம்

இதற்கு முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில், ஆப்பிள் நிறுவனத்தின் 'Siri', 'Vision Pro' மற்றும் 'Intelligent Systems Experience' ஆகிய பிரிவுகளில் சுமார் 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் புதிய தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப ஆட்குறைப்பு செய்யப்படுவதாக தெரிவித்த ஆப்பிள் நிறுவனம், சில புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் அதேவேளையில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பழைய பணியிடங்கள் குறைக்கப்படுவதாகக் குறிப்பிட்டிருந்தது.

ஆப்பிள் Fitness+ சேவைக்கு அதிகளவில் புதிய உள்ளடக்கங்களை உருவாக்க வேண்டியுள்ளதாலும், சந்தாதாரர்களின் எண்ணிக்கை மாறுபாட்டினாலும் அதிக செலவு ஏற்படுவதாகக் கருதப்படுகிறது.

எனவே, செலவுகளைக் குறைக்கவும், நிறுவன அமைப்பில் மாற்றங்களைக் கொண்டு வரவும் இந்த ஆட்குறைப்பு முதற்கட்ட நடவடிக்கையாக இருக்கலாம் எனத் தெரிகிறது.

துறை நிலைப்பாடு

தொடரும் ஐடி நிறுவன ஆட்குறைப்பு

ஆப்பிள் மட்டுமின்றி, உலகளவில் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களும் செலவுக் குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த மாதத்தில் ஆரக்கிள் நிறுவனம் ஆயிரக்கணக்கான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ள நிலையில், உபெர் நிறுவனம் 3,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களை நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT