AI-யால் மனிதகுலத்திற்கு பேரழிவு என எச்சரிக்கை விடுத்து பங்குச்சந்தைக்குள் நுழையும் Anthropic
செய்தி முன்னோட்டம்
செயற்கை நுண்ணறிவு(AI) துறையின் முன்னணி நிறுவனமான ஆந்த்ரோபிக், அமெரிக்கப் பங்குச்சந்தையில் தனது பங்குகளை வெளியிடுவதற்கான முதற்கட்ட ஆவணங்களைத் தாக்கல் செய்துள்ளது. எனினும், போதிய பாதுகாப்பு வழிமுறைகள் இன்றி உருவாக்கப்படும் மேம்பட்ட AI அமைப்புகள் மனிதகுலத்திற்கு பேரழிவை உருவாக்கக்கூடும் என அந்நிறுவனம் தனது முதலீட்டாளர்கள் ஆவணத்தில் எச்சரித்துள்ளது. Nasdaq பங்குச்சந்தையில் 'ANT' என்ற வர்த்தக குறியீட்டுடன் களம் புகும் ஆந்த்ரோபிக், முழுமையாக AI துறையைச் சார்ந்து பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் முதல் நிறுவனமாகும். ஸ்பேஸ்எக்ஸ் சாதனையை முறியடித்து, இந்நிறுவனத்தின் மதிப்பு $1.8 டிரில்லியன் வரை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு ஆண்டின் முதல் பாதியில் நிறுவனத்தின் வருவாய் $16.3 பில்லியனாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தை விட 14 மடங்கு அதிகமாகும்.
சவால்கள்
AI அமைப்புகளால் எழும் அபாயங்கள் மற்றும் சவால்கள்
மனிதக் கட்டுப்பாட்டைத் தாண்டி AI தன்னிச்சையாகச் செயல்படுதல், தவறாகப் பயன்படுத்தப்படுதல் அல்லது ஆயுதமாக்கப்படுதல் ஆகியவற்றால் கடுமையான அச்சுறுத்தல்கள் ஏற்படும் என ஆந்த்ரோபிக் சுட்டிக்காட்டியுள்ளது.
தைவான் சிப் தயாரிப்பாளர்கள் மீதான அதிகப்படியான சார்பு, அமெரிக்காவில் குவிந்துள்ள தரவு மையங்கள் மற்றும் குறிப்பிட்ட சில Cloud Computing சேவை வழங்கி நிறுவனங்களைச் சார்ந்திருப்பது ஆகியவை வியாபாரச் சவால்களாக பட்டியலிடப்பட்டுள்ளன.
தொடக்கத்தில் பெருமளவு நிதி இழப்புகள் ஏற்பட்டாலும், செயற்கை நுண்ணறிவு அமைப்புகளின் ஆராய்ச்சி மற்றும் உள்கட்டமைப்புக்காகத் தொடர்ந்து பிரம்மாண்ட முதலீடுகளைச் செய்யப்போவதாக நிறுவனம் உறுதியளித்துள்ளது.
எதிர்காலத்தில் கோடிக்கணக்கான 'Virtual Agents' மனிதனின் அனைத்துத் துறைகளிலும் பெரும் புரட்சியை ஏற்படுத்துவார்கள் என ஆந்த்ரோபிக் நம்பிக்கை தெரிவித்துள்ளது.