
அதானி குழுமப் பங்குகளின் வீழ்ச்சியில் Short Selling மூலம் லாபமடைந்த 12 நிறுவனங்கள்
செய்தி முன்னோட்டம்
2023 ஜனவரி 24-ம் தேதியன்று, இந்தியாவின் பெரிய வணிகக் குழுமங்களுள் ஒன்றான் அதானி குழுமம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாகக் குற்றச்சாட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டது அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ரிசர்ச் என்ற ஆய்வு நிறுவனம்.
இந்த அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து, அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் அனைத்து கடும் சரிவைச் சந்தித்தன. அதானி குழுமப் பங்குகளின் சரிவில் மூன்று இந்திய நிறுவனங்கள் உட்பட 12 நிறுவனங்கள் லாபம் அடைந்திருப்பதாக அமலாக்கத்துறை தங்களது ஆய்வறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.
இந்த ஹிண்டன்பர்க் அறிக்கை மற்றும் அதானி குழுமப் பங்குகள் தொடர்பான இந்த ஆய்வறிக்கையை கடந்த ஜூலை மாதம் இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையமான செபியிடம் சமர்ப்பித்திருக்கிறது அமலாக்கத்துறை.
அதானி
அமலாக்கத்துறையின் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பது என்ன?
அதானி குழுமப் பங்குகளின் வீழ்ச்சியில் ஷார்ட் செல்லிங் (Short Selling) என்னும் ஒரு வகை பங்குச்சந்தை வர்த்தக நடவடிக்கை மூலம் மேற்கூறிய வகையில் 12 நிறுவனங்கள் லாபமடைந்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் பல நிறுவனங்கள், ஹிண்டர்பர்க் அறிக்கை வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன்பு இந்திய பங்குச்சந்தைகளில் அதானி குழுமப் பங்குகளை ஷார்ட் (Short) செய்திருக்கின்றன.
மேலும், இந்த 12 நிறுவனங்களும் எந்தவிதமான உரிமையாளர் கட்டமைப்பைக் கொண்டிருக்கின்றன என்பதை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
இதில் கேமன் தீவுகளைச் சேர்ந்த ஒரு நிறுவனமானது, பல்வேறு முறை இன்சைடர் டிரேடிங் முறைகேட்டில் சிக்கி அமெரிக்காவில் 1.8 பில்லியன் டாலர்கள் வரை அபராதம் செலுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.