உலக மோட்டார்சைக்கிள் தினம் இன்று
ஒவ்வொரு வருடமும் ஜூன் 21-ம் நாள் (இன்று) உலக மோட்டார்சைக்கிள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. 150 ஆண்டு கால வரலாறு கொண்ட மோட்டார்சைக்கிள்களைக் கொண்டாடும் விதமாகவும், மோட்டார்சைக்கிள் தொடர்பான அத்தனை செயல்களையும் அதனை உருவாக்குபவர்களையும் கொண்டாடும் விதமாகவும் இந்த உலக மோட்டார்சைக்கிள் தினம் கொண்டாடப்படுகிறது. மோட்டார்சைக்கிளில் பயணிப்பது, மோட்டார்சைக்கிள்களைப் பற்றித் தெரிந்து கொள்வது, மோட்டார்சைக்கிள் குறித்த தங்களுடைய ஆர்வத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது போன்ற செயல்களை செய்து மோட்டார்சைக்கிள் ஆர்வலர்கள் இன்றைய தினத்தைக் கொண்டாடுகிறார்கள். உலக மோட்டார்சைக்கிள் தினமாகிய இந்நாளில் மோட்டார் வாகன பயணங்களின் போது நமக்கு கிடைக்கும் சுதந்திரத்தை நாம் அனுபவிக்க மறந்துவிட கூடாது.
மோட்டர்சைக்கிள்களின் வரலாறு:
முதல் மோட்டார்சைக்கிளானது 1960-ல் பிரான்ஸில் பியரி மிஷௌ என்பவரால் உருவாக்கப்பட்டது. முதல் மோட்டார் வாகனமானது நீராவியால் இயங்கும் வகையிலேயே உருவாக்கப்பட்டிருக்கிறது. அதுவும், அடுத்த பல ஆண்டுகளுக்கு ஒரு சில மோட்டார்சைக்கிள்களே உருவாக்கப்பட்டிருக்கின்றன. தற்போது நாம் பயன்படுத்தும் Internal Combustion இன்ஜின் மோட்டர்சைக்கிளுக்கு முன்னோடியான மோட்டார் வாகனம் 1885-லேயே உருவாக்கப்பட்டிருக்கிறது. குறைந்த காலத்திலேயே மோட்டார்சைக்கிளின் புகழ் உலகெங்கும் பரவி, இதற்கான தேவையும் அதிகரித்திருக்கிறது. போர்க்காலங்களில் எளிதாகவும், அனைத்து இடங்களுக்கும் தகவல்களைக் கொண்டு சேர்க்க மோட்டார்சைக்கிள் உதவிகரமாக இருந்திருக்கிறது. இதன் காரணமாக 1894-ல் முதன்முறையாக மோட்டார்சைக்கிள் உற்பத்தி தொடங்கியிருக்கிறது. சைக்கிள்களில் சிறிய மோட்டார்களை பொறுத்தி மறுவடிவம் செய்யப்பட்ட மோட்டார்சைக்கிள்கள் 1900-களில் மிகவும் பிரபலமாகியிருக்கிறது. அதனைத் தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சியடைந்து தற்போதைய நிலையை அடைந்திருக்கின்றன மோட்டார்சைக்கிள்கள்.