ஃபோக்ஸ்வேகன் வரலாற்றில் மிகப்பெரிய சரிவு! 4 தொழிற்சாலைகளை மூடவும் 1 லட்சம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யவும் திட்டம்
செய்தி முன்னோட்டம்
உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோக்ஸ்வேகன், தனது 89 ஆண்டுகால வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு சுமார் 1 லட்சம் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யவும், ஜெர்மனியில் உள்ள தனது 4 முக்கியத் தொழிற்சாலைகளை மூடவும் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. ஐரோப்பிய சந்தையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார மந்தநிலை, அமெரிக்காவின் புதிய சுங்கவரி விதிப்புகள் மற்றும் மிக முக்கியமாக சீன மின்சார வாகன நிறுவனங்களின் அசுர வளர்ச்சி ஆகியவை இந்த ஜெர்மன் ஆட்டோமொபைல் ஜாம்பவானை உலுக்கியுள்ளன. இந்த புனரமைப்புத் திட்டம் குறித்து வருகிற ஜூலை 9 ஆம் தேதி நடைபெறவுள்ள நிறுவனத்தின் உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.
பின்னணி
மூடப்படும் முக்கியத் தொழிற்சாலைகளும் அதன் பின்னணியும்
ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆலிவர் புளூம் தயாரித்துள்ள ரகசியத் திட்டத்தின்படி, ஜெர்மனியில் உள்ள ஹனோவர், ஸ்விக்கா, எம்டன் மற்றும் ஆடி நிறுவனத்தின் நெக்கர்சல்ம் ஆகிய 4 பிரம்மாண்ட உற்பத்தி ஆலைகளை முழுமையாக மூடத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆலைகள் மூடப்பட்டால் மட்டுமே நேரடியாக 45,000 ஊழியர்களின் வேலைவாய்ப்பு பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 2024 ஆம் ஆண்டின் இறுதியில் தொழிற்சங்கங்களுடன் பேசி முடிவு செய்யப்பட்ட 50,000 பணியிடக் குறைப்புகளையும் சேர்த்தால், ஒட்டுமொத்தமாக இந்தத் தற்போதைய பணிநீக்கங்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை எட்டும் என்று ஆட்டோமொபைல் துறை வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
சீன நிறுவனங்களின் போட்டி
சீன இவி நிறுவனங்களின் போட்டியால் நேர்ந்த சரிவு
ஒரு காலத்தில் சீனக் கார் சந்தையின் அசைக்க முடியாத ராஜாவாகத் திகழ்ந்த ஃபோக்ஸ்வேகன் நிறுவனம், கடந்த 2024 ஆம் ஆண்டில் சீனாவின் பிஒய்டி (BYD) நிறுவனத்திடம் தனது முதலிடத்தைப் பறிகொடுத்தது. சீன சந்தையில் உள்ளூர் பிராண்டுகளின் ஆதிக்கத்தால், வெளிநாட்டு நிறுவனங்களின் சந்தைப் பங்கு 2020 ஆம் ஆண்டில் இருந்த 57 சதவீதத்தில் இருந்து, 2025 ஆம் ஆண்டில் 32 சதவீதமாகக் கடகடவென சரிந்துள்ளது. தற்பொழுது பிஒய்டி, செரி, எஸ்ஏஐசி மற்றும் லீப்மோட்டார் போன்ற சீன நிறுவனங்கள் ஃபோக்ஸ்வேகனின் சொந்த எல்லையான ஐரோப்பாவிலும் தங்களது சந்தைப் பங்கை இருமடங்காக உயர்த்தியுள்ளதே இந்தத் திடீர் வீழ்ச்சிக்கு முதன்மைக் காரணமாகும்.
திட்ட விபரம்
முதலீட்டு குறைப்பு மற்றும் பிராண்ட் பிரிப்புத் திட்டம்
இந்த இமாலயப் நெருக்கடியைச் சமாளிப்பதற்காக, ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான தனது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முதலீட்டுப் பட்ஜெட்டை 15 சதவீதம் வரை குறைக்கத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் அதன் மொத்த முதலீட்டுத் தொகை 130 பில்லியன் யூரோவாகக் குறையும் வாய்ப்புள்ளது. மேலும், நிறுவனத்தின் நிதி நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்காக, அதன் முதன்மைப் பிரிவான ஃபோக்ஸ்வேகன் பயணியர் கார் பிரிவு மற்றும் அதன் உதிரிபாகங்கள் தயாரிப்புப் பிரிவு ஆகியவற்றைத் தனித்தனி நிறுவனங்களாகப் பிரித்து பங்குச் சந்தையில் பட்டியலிடவும் சிஇஓ ஆலிவர் புளூம் மற்றும் நிதி அதிகாரி ஆர்னோ ஆன்ட்லிட்ஸ் ஆகியோர் ஆலோசித்து வருகின்றனர்.
கடும் எதிர்ப்பு
தொழிற்சங்கங்கள் மற்றும் பங்குதாரர்களின் கடுமையான எதிர்ப்பு
ஃபோக்ஸ்வேகனின் இந்த அதிரடிப் பணிநீக்கத் திட்டத்திற்கு ஜெர்மனியின் வலிமைமிக்க ஐஜி மெட்டல் தொழிற்சங்கம் மற்றும் நிறுவனத்தின் பொதுப் பணிக்குழு ஆகியவை தங்களது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளன. நிர்வாகத்தின் இந்தத் தன்னிச்சையான முடிவை எதிர்த்துத் தங்களது முழு பலத்துடன் போராடப் போவதாக அவர்கள் எச்சரித்துள்ளனர். மேலும், ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் இரண்டாவது பெரிய பங்குதாரரான ஜெர்மனியின் லோயர் சாக்சனி மாகாண அரசும் இந்தத் தொழிற்சாலை மூடல் திட்டத்திற்குத் தங்களது ஆதரவை வழங்க வாய்ப்பில்லை என்று கூறியுள்ளதால், வரும் நாட்களில் நிர்வாகத்திற்கும் ஊழியர்களுக்கும் இடையே கடுமையான மோதல் வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.