ரூ.1.68 கோடி விலையில் இந்தியாவில் வெளியான அப்டேட் செய்யப்பட்ட போர்ஷே பனமேரா
தங்களுடைய மேம்படுத்தப்பட்ட 'மூன்றாம் தலைமுறை பனமேரா' (Panamera) ஸ்போர்ட் செடான் மாடலின் உலகளாவிய வெளியீட்டைத் தொடர்ந்து, தற்போது இந்தியாவிலும் அதனை வெளியிட்டிருக்கிறது போர்ஷே. இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் 'மெர்சிடீஸ் AMG GT63 S e-பெர்ஃபாமன்ஸ் 4-டோர் கூப்' மாடலுக்குப் போட்டியாக இந்தப் புதிய மேம்படுத்தப்பட்ட மூன்றாம் தலைமுறை பனமேராவைக் களமிறக்கியிருக்கிறது போர்ஷே. புதிய பனமேராவின் V6 இன்ஜின் கொண்ட மாடலுக்கான விலையை மட்டுமே போர்ஷே அறிவித்திருக்கும் நிலையில், V8 இன்ஜின் கொண்ட பனமேரா மாடலின் இந்திய வெளியீட்டிற்கு இன்னும் சிறிது காலம் நாம் காத்திருக்க வேண்டும். மேலும், V6 மற்றும் V8 ஆகியவற்றின் ஹைபிரிட் வெர்ஷன்களில் இந்தியாவில் வெளியாகாது எனவும் தெரிகிறது.
போர்ஷே பனமேரா: வசதிகள் மற்றும் விலை
புதிய அப்டேட் செய்யப்பட்ட மூன்றாம் தலைமுறை பனமேராவில் 2.6 லிட்டர் ட்வின் டர்போ V6 இன்ஜினைப் பயன்படுத்தியிருக்கிறது போர்ஷே. ரியர் வீல் டிரைவைக் கொண்ட இந்த மாடலில் 8-ஸ்பீடு PDK ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த பனமேராவின் ஸ்டாண்டர்டு வெர்ஷனில், 8-வே அட்ஜஸ்டபிள் எலெக்ட்ரிக் சீட், மேட்ரிக்ஸ் எல்இடி விளக்குகள், 6 ஏர்பேக்குகள், 12.3-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் வாய்ஸ் கண்ட்ரோல் ஆகிய வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவில் இந்தப் புதிய மூன்றாம் தலைமுறை பனமேராவை, ரூ.1.68 கோடி எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியிட்டிருக்கிறது போர்ஷே.