விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுபவர்களுக்கு 25,000 ரூபாய் வழங்கப்படும்: நிதின் கட்கரி
செய்தி முன்னோட்டம்
சாலை விபத்தில் காயம் அடைந்தவருக்கு உதவி செய்பவர்களுக்கு தற்போது வழங்கப்படும் ரூ.5,000 சன்மானத்தை விட 5 மடங்கு அதிகமாக ரூ.25,000 பரிசு வழங்கப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
நாக்பூரில் நடிகர் அனுபம் கெருடன் சாலைப் பாதுகாப்பு குறித்த நிகழ்வின் போது பேசிய கட்காரி, சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை விபத்தின் முக்கியமான முதல் ஒரு மணி நேரத்தில் மருத்துவமனைக்குக் கொண்டு வருபவர்களுக்கு தற்போதைய வெகுமதி போதுமானதாக இல்லை என்று கூறினார்.
அதற்காக இந்த மாற்றத்தினை அவர் அறிவித்தார்.
கோல்டன் ஹவர்
விபத்தில் காயமடைந்தவர்களுக்கு கோல்டன் ஹவரில் உதவுபவர்களுக்கு சன்மானம்
விபத்துக்களில் காயம் அடைந்தவர்களுக்கு முதல் 7 நாட்களுக்கு 1.5 லட்சம் ரூபாய் வரையிலான மருத்துவமனை செலவை அரசு ஏற்கும் என்று அமைச்சர் மேலும் கூறினார்.
இந்தத் திட்டம் தேசிய நெடுஞ்சாலைகளில் காயம் அடைந்தவர்களுக்கு மட்டும் அல்ல, மாநில நெடுஞ்சாலைகளில் காயம் அடைந்தவர்களுக்கும் பொருந்தும்.
நல்ல சமாரியர்களுக்கு வெகுமதி அளிக்கும் திட்டம் அக்டோபர் 2021இல் தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தின்படி, விபத்துக்குள்ளான ஒருவரின் உயிரைக் காப்பாற்றும் நபர்கள் உடனடியாக உதவி அளித்து, கோல்டன் ஹவருக்குள்(விபத்து நடந்த முதல் ஒரு மணி நேரத்தில்) மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்பவர்களுக்கு வெகுமதி அளிக்கப்படும்.
நல்ல சமாரியன்
யார் அந்த நல்ல சமாரியன்?
மத்திய அரசாங்கம் ஒரு நல்ல சமாரியன் யார் என்பதையும் வரையறுத்துள்ளது.
அதன்படி, "நல்ல நம்பிக்கையுடன், பணம் அல்லது வெகுமதியை எதிர்பார்க்காமல், எந்தவிதமான கவனிப்பு அல்லது சிறப்பு உறவும் இல்லாமல்,விபத்து, அல்லது அவசர மருத்துவ நிலை, அல்லது அவசர நிலை விபத்தில் காயமடைந்த ஒருவருக்கு உடனடி உதவி அல்லது அவசர சிகிச்சையை வழங்க தானாக முன்வந்து செய்பவர்கள்".