
இந்தியாவில் ரீபேட்ஜ் செய்யப்பட்ட ரூமியான் எம்பிவியை வெளியிட்டது டொயோட்டா
செய்தி முன்னோட்டம்
மாருதியிடம் இருந்து ரீபேட்ஜ் செய்யப்பட்ட எர்டிகாவை, ரூமியான் எம்பிவியாக இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது டொயோட்டா. ஏற்கனவே இந்த கார் மாடலை தென்னாப்பிரிக்காவில் டொயோட்டா விற்பனை செய்து வந்த நிலையில், தற்போது இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது.
S, V மற்றும் G என மூன்று ட்ரிம்களாக புதிய ரூமியானை வெளியிட்டிருக்கிறது டொயோட்டா. இவற்றில், S மற்றும் V ட்ரிம்களில் மட்டும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட வேரியன்ட்களும் வெளியிடப்பட்டிருக்கின்றன.
இத்துடன் அடிப்படையான S ட்ரிமில், CNG கிட் பொருத்தப்பட்ட வேரியன்ட் ஒன்றையும் புதிய ரூமியான் லைன்-அப்பில் வழங்கியிருக்கிறது டொயோட்டா. எர்டிகாவின் ரீபேட்ஜ் வெர்ஷன் தான் என்றாலும், எர்டிகாவை விட ரூ.51,000 முதல் ரூ.61,000 வரை கூடுதலான விலையில் வெளியாகியிருக்கிறது ரூமியான் எம்பிவி.
டொயோட்டா
டொயோட்டா ரூமியான்: இன்ஜின் மற்றும் விலை
எர்டிகாவில் இருந்து எந்தவித பெரிய மாற்றங்களையும் ரூமியானில் டொயோட்டா மேற்கொள்ளவில்லை. ரூமியானில் கூடுதலாக ஃபாக் லைம்ப் ஹவுசிங் மற்றும் இன்னோவா கிரிஸ்டாவில் இருப்பது போன்ற கிரில்களை மட்டும் கொடுத்திருக்கிறது டொயோட்டா.
டொயோட்டா ரூமியானில், எர்டிகாவில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அதே 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த இன்ஜினானது, 103hp பவரையும், 137Nm டார்க்கையும் உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டிருக்கிறது.
5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கண்வர்ட்டன் ஆகிய கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்பட்டிருக்கின்றன.
இந்தியாவில் ரூ.10.29 முதல் ரூ.13.68 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலைகளில் வெளியிடப்பட்டிருக்கிறது டொயோட்டா ரூமியான். கியா கேரன்ஸ் மற்றும் மாருதி சுஸூகி XL6 ஆகிய மாடல்களுக்குப் போட்டியாக இந்தியாவில் விற்பனை செய்யப்படவிருக்கிறது ரூமியான்.