நவம்பர் 25-ல் களமிறங்கும் புதிய டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் ஃபேஸ்லிஃப்ட்: டீசர் வெளியீடு
செய்தி முன்னோட்டம்
இந்திய குடும்பங்களின் விருப்பமான எம்பிவி காரான டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ், 2022 ஆம் ஆண்டு அறிமுகமானதற்கு பிறகு முதல்முறையாக பெரிய அளவிலான மாற்றங்களைப் பெறவுள்ளது. வரும் நவம்பர் 25, 2026 அன்று இந்திய சந்தையில் அறிமுகமாகவுள்ள இந்த ஃபேஸ்லிஃப்ட் மாடலின் முதல் அதிகாரப்பூர்வ டீசரை டொயோட்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது. காரின் ஒட்டுமொத்த அளவுகளில் மாற்றம் இல்லாவிட்டாலும், புதிய முகப்பு விளக்குகள், அகலமான கிரில், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பம்பர்கள் மற்றும் புதிய அலாய் வீல்கள் மூலம் கவர்ச்சிகரமான தோற்றத்தை பெறவுள்ளது.
நவீன திரைகள்
டைசர் காரை போன்ற எல்.இ.டி விளக்குகளும் 12.3 இன்ச் நவீனத் திரைகளும்
வெளியாகியுள்ள டீசர் வீடியோவில் காரின் முன்பகுதி மட்டுமே காட்டப்பட்டுள்ள நிலையில், டொயோட்டா டைசர் எஸ்யூவி காரை போன்ற கூர்மையான எல்.இ.டி பகல்நேர விளக்குகள் (DRLs) இடம்பெற்றுள்ளது உறுதியாகியுள்ளது.
உட்புறக் கட்டமைப்பைப் பொறுத்தவரை, ஏற்கனவே இந்தோனேசியாவில் விற்பனை செய்யப்படும் மாடலைப் போலவே 12.3 இன்ச் பெரிய டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் திரை மற்றும் 12.3 இன்ச் முழுமையான டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே வழங்கப்பட உள்ளது.
மேலும் புதிய இருக்கை வடிவமைப்பு, டேஷ்கேம் மற்றும் மேம்படுத்தப்பட்ட ADAS பாதுகாப்பு வசதிகளும் இதில் எதிர்பார்க்கப்படுகின்றன.
ஹைபிரிட் கார்
இந்தியாவின் முதல் ஃப்ளெக்ஸ்-ஃப்யூயல் ஸ்ட்ராங்-ஹைப்ரிட் காராக உருவெடுக்கும் வாய்ப்பு
இன்ஜின் செயல்பாட்டை பொறுத்தவரை, தற்போதைய மாடலில் உள்ள 173hp ஆற்றலை வழங்கும் 2.0 லிட்டர் நான்கு சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் (CVT) மற்றும் 184hp ஆற்றலை வழங்கும் ஸ்ட்ராங்-ஹைப்ரிட் இன்ஜின் (e-CVT) ஆகியவை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் மிக முக்கிய சிறப்பம்சமாக, E30 முதல் E85 வரையிலான அதிக எத்தனால் கலவையில் இயங்கக்கூடிய இந்தியாவின் முதல் ஃப்ளெக்ஸ்-ஃப்யூயல் ஸ்ட்ராங்-ஹைப்ரிட் காராகப் புதிய ஹைகிராஸ் அறிமுகமாக வாய்ப்புள்ளது.
எனினும் எத்தனால் கலவை அளவு குறித்து டொயோட்டா இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
சந்தை போட்டி
எதிர்பார்க்கப்படும் விலை உயர்வு மற்றும் சந்தையில் போட்டியிடும் முக்கிய கார்கள்
வெளிப்புற வடிவமைப்பு மாற்றங்கள் மற்றும் கூடுதல் நவீனத் தொழில்நுட்ப வசதிகள் சேர்க்கப்படுவதால், புதிய இன்னோவா ஹைகிராஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விலை தற்போதைய விலையை விட சற்று அதிகமாக (சுமார் ₹19.50 லட்சம் முதல் ₹32.70 லட்சம் வரை எக்ஸ்-ஷோரூம்) நிர்ணயிக்கப்படலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இந்திய சந்தையில் இந்தப் புதிய மாடல் மாருதி சுஸூகி இன்விக்டோ, டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா மற்றும் பிஒய்டி இமேக்ஸ் 7 ஆகிய கார்களுக்குத் தொடர்ந்து கடும் போட்டியாக அமையும்.