நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்திய டாடா
இந்தியாவிற்கான அப்டேட் செய்யப்பட்ட நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் மாடலை அறிமுகப்படுத்தியிருக்கிறது டாடா. தாங்கள் அறிமுகப்படுத்திய கான்செப்ட் மாடல்களான கர்வ் மற்றும் ஹேரியர் EVயில் பயன்படுத்தப்பட்டிருக்கும் சில டிசைன் எலமெண்ட்களை புதிய நெக்ஸான் ஃபேஸ்லிப்டில் பயன்படுத்தியிருக்கிறது டாடா. வெளிப்புறம் சின்னச்சின்ன டிசைன் மாற்றங்களுடன், உட்புறம் புதிய வசதிகள் சிலவற்றையும் பெற்றிருக்கிறது டாடாவின் அப்டேட் செய்யப்பட்ட நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட். நெக்ஸான் ஃபேஸ்லிஃப்டின் வேரியன்ட்களுக்கு XE, XM போன்ற எழுத்துப் பெயர்களைத் தவிர்த்து, பன்ச்சில் பயன்படுத்தியிருப்பதைப் போல ஸ்மார்ட், ப்யூர், க்ரியேட்டி மற்றும் ஃபியர்லெஸ் ஆகிய நான்கு பெயர்களைப் பயன்படுத்தியிருக்கிறது டாடா. இந்தியாவில் மஹிந்திரா எக்ஸ்யூவி300, மாருதி சுஸூகி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ மற்றும் கியா சோனெட் ஆகிய கார்களுக்குப் போட்டியாக களமிறங்குகிறது புதிய டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட்.
டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட்: இன்ஜின் மற்றும் அறிமுகம்
புதிய நெக்ஸானில் 120hp பவர் மற்றும் 170Nm டார்க்கை உற்பத்தி செய்யக்கூடிய 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினையும், 115hp பவர் மற்றும் 160Nm டார்க்கை உற்பத்தி செய்யக்கூடிய 1.5 லிட்டர் டர்போ டீசல் இன்ஜினையும் வழங்கியிருக்கிறது டாடா. இதில் டர்போ பெட்ரோல் இன்ஜினுடன், 5-ஸ்பீடு மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ்களையும், 6-ஸ்பீடு மற்றும் 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்களையும் வழங்கியிருக்கிறது டாடா. அதேபோல், டர்போ டீசல் இன்ஜினுடன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு AMT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் மற்றும் நெக்ஸான் EV ஃபேஸ்லிஃப்டின் முன்பதிவு வரும் செப்டம்பர் 4ம் தேதி தொடங்கவிருக்கும் நிலையில், இந்த இரு மாடல்களையும் செப்டம்பர் 14ம் தேதி வெளியிடுகிறது டாடா.