ரூ.15.49 லட்சம் விலையில் வெளியானது அப்டேட் செய்யப்பட்ட டாடா ஹேரியர் ஃபேஸ்லிஃப்ட்
தங்களுடைய சஃபாரி ஃபேஸ்லிஃப்ட் மாடலுடன், 2023ம் ஆண்டிற்கான அப்டேட் செய்யப்பட்ட ஹேரியர் எஸ்யூவி ஃபேஸ்லிஃப்ட் மாடலையும் தற்போது வெளியிட்டிருக்கிறது டாடா மோட்டார்ஸ். ஸ்மார்ட், ப்யூர், அட்வென்சர் மற்றும் ஃபியர்லெஸ் என நான்கு வேரியன்ட்களாக வெளியாகியிருக்கும் ஹேரியர் மாடலானது எக்ஸ்யூவி700, ஜீப் காம்பஸ் மற்றும் எம்ஜி ஹெக்டர் ஆகிய மாடல்களுக்குப் போட்டியாகக் களமிறக்கப்பட்டிருக்கிறது. புதிய ஹேரியரின் வெளிப்புறம் புதிய கிரில், புதிய ஸ்பிளிட் செய்யப்பட்ட முகப்பு விளக்கு மற்றும் கிரில்லுக்கு மேலே முழு அகலத்திற்கும் நீளும் எல்இடி லைட் பார் ஆகியவற்றைக் கொடுத்திருக்கிறது டாடா. முன்பக்க மற்றும் பின்பக்க பம்பர்கள் இரண்டும் மறுவடிவமைப்பு செய்யப்பட்டிருக்கும் நிலையில், பின்பக்க டெயின் விளக்கு பகுதியையும் முழுவதுமாக எல்இடியாக மாற்றியிருக்கிறது டாடா.
டாடா ஹேரியர் எஸ்யூவி ஃபேஸ்லிஃப்ட்: வசதிகள் மற்றும் விலை
உட்பக்கம் டேஷ்போர்டை முழுவதுமாக மறுவடிவமைப்பு செய்து ஹேரியருக்கு புதிய உட்புற தோற்றத்தை அளித்திருக்கிறது டாடா. வேரியன்டிற்கு ஏற்ப 10.25 முதல் 12.3 இன்ச் வரை பல அளவுகளில் டச்ஸ்கிரீன் டிஸ்பிளே வழங்கப்பட்டிருக்கிறது. HVAC கண்ட்ரோல் பேனல், டூ ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல், 10 ஸ்பீக்கர்கள் கொண்ட சவுண்டு சிஸ்டம் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் ஆகிய வசதிகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. பாதுகாப்பிற்காக ஏழு ஏர்பேக்குகள், ஹில் ஹோல்டு கண்ட்ரோல், 3 பாய்ண்ட் சீட் பெல்ட்கள் மற்றும் பல்வேறு ADAS வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. நார்மல், ரஃப் மற்றும் வெட் என மூன்று டிரைவிங் மோடுகளைக் கொண்டிருக்கும் இந்தப் புதிய ஹேரியரை இந்தியாவில், ரூ.15.49 லட்சம் முதல் ரூ.24.49 லட்சம் வரையிலான விலைகளில் விற்பனை செய்யவிருக்கிறது டாடா.