CNG வசதியுடனும் வெளியாகிறதா டாடா 'கர்வ்'?
செய்தி முன்னோட்டம்
டாடா மோட்டார்ஸின் புதிய மிட்சைஸ் எஸ்யூவியான 'கர்வ்' (Curvv) மாடலானது பெட்ரோல்/டீசல் இன்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டாக் ஆகிய இரண்டு வகையான பவர்ட்ரெயின் ஆப்ஷன்களையும் பெறும் என உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், இந்த புதிய மாடலானது CNG வசதியுடனும் வெளியாகலாம் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.
புதிதாக வெளியான கர்வ் மாடலின் டிசைன் படங்களில், அதன் டேஷ்போர்டில் CNG ஆப்ஷனும் இடம்பெற்றிருக்கிறது. இதனைத் தொடர்ந்தே புதிய கர்வ் மாடலானது CNG வசதியுடனும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், டாடா மோட்டார்ஸ் நிறுவனமானது தங்களது மாடல்களின் CNG வேரியன்ட்டையும் தொடர்ந்து வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. எனவே, இந்த புதிய மாடலின் CNG வேரியன்ட்டையும் அந்நிறுவனம் வெளியிடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது.
டாடா மோட்டார்ஸ்
கர்வ் CNG:
CNG-யில் டாடாவின் புதிய ட்வின் சிலிண்டர் தொழில்நுட்பத்தைக் கொண்ட மாடலே கர்வ் எஸ்யூவியில் பயன்படுத்தப்படும் எனத் தெரிகிறது.
முன்னதாக ஒற்றை சிலிண்டர் கொண்ட CNG கிட்டைப் பயன்படுத்தி வந்தது டாடா. இந்த கிட்டானது ஒரு காரின் மொத்த பூட் ஸ்பேஸையும் எடுத்துக் கொள்கிறது.
எனவே, குறைவான பூட் ஸ்பேஸை மட்டும் பயன்படுத்தும் வகையிலான இரண்டு சிறிய சிலிண்டர்கள் கொண்ட CNG கிட்டை உருவாக்கியது டாடா. இந்த புதிய CNG கிட்டானது ஆல்ட்ராஸ் CNG மாடலில் முதல் முதலாகப் பயன்படுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தற்போது 'கர்வ்'விலும் ட்வின் சிலிண்டர்கள் கொண்ட CNG கிட்டையே டாடா பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எலெக்ட்ரிக் மற்றும் பெட்ரோல்/டீசல் இன்ஜின் கொண்ட கர்வ் மாடல் 2024-ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.