பேட்டரி மற்றும் எத்தனாலில் இயங்கும் சரக்கு வாகனங்களுக்கு கட்டணமில்லா அனுமதிச் சீட்டு
பேட்டரி, மெத்தனால் மற்றும் எத்தனாலில் இயங்கும் சரக்கு வாகனங்களுக்கு கட்டணமில்லா அனுமதிச் சீட்டு வழங்கப்படும் எனக் கூறி தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருக்கிறது. மேலும், 3,000 கிலோவுக்கும் கீழ் குறைவான எடை கொண்ட சரக்கு வாகனங்களைத் தவிர மேற்கூறிய வகையில் இயங்கும் பிற சரக்கு வாகனங்கள் அணைத்திற்கும் கட்டணமில்லா அனுமதிச்சீட்டு வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. தற்போது வரை, சொந்தப் பயன்பாட்டிற்குப் பயன்படுத்தப்படும் எலெக்ட்ரிக் வாகனங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டு வந்த நிலையில், வணிக பயன்பாட்டிற்காகப் பயன்படுத்தப்படும் எலெக்ட்ரிக் வாகனங்களையும் இனி பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சகத்தின் அறிவிப்பு:
கடந்த 2018-ல் வணிகப் பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு அனுமதிச் சீட்டு பெறுவதில் இருந்து விலக்கு அளித்தது மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம். ஆனால், அனுமதிச் சீட்டு இல்லாமல் இயங்குவது குழப்பத்திற்கு வழிவகுக்கும் எனக்கூறி, கட்டணமில்லா அனுமதிச் சீட்டு வழங்க தற்போது அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. எலெக்ட்ரிக் வாகனங்களை எளிதில் அடையாளம் காண புதிய திட்டம் ஒன்றை எலெக்ட்ரிக் வாகனக் கொள்கை 2023-ன் கீழ் அமல்படுத்தியது தமிழக அரசு. அதன்படி, சொந்தப் பயன்பாட்டிற்குப் பயன்படுத்தப்படும் வாகனங்கள் பச்சை நிற எண் தகட்டில் வெள்ளை நிற எண்களையும், வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் பச்சை நிற எண் தகட்டில் மஞ்சள் நிற எண்களையும் கொண்டிருக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.