வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையிலான 'விங்மேன்' செயலியை வெளியிட்டிருக்கிறது ராயல் என்ஃபீல்டு
இந்தியாவின் முன்னணி ப்ரீமியம் பைக் தயாரிப்பாளரான ராயல் என்ஃபீல்டு தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கான புதிய கனெக்டிவிட்டி செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது. விங்மேன் (Wingman) எனப்படும் புதிய செயலியை, ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் என இரண்டு இயங்குதளங்களிலும் வெளியிட்டிருக்கிறது ராயல் என்ஃபீல்டு. தற்போது ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் ப்ரீமியம் பைக் மாடலான சூப்பர் மீட்டியார் 650 மாடலை மட்டும் அந்த செயலியில் கனெக்ட் செய்து கொள்ள முடியும் எனத் தெரிவித்திருக்கிறது அந்நிறுவனம். தற்போது ஒரு பைக் மாடலை மட்டுமே கனெக்ட் செய்ய முடிந்தாலும், அடுத்து வெளியாகவிருக்கும் பைக்குகள் புதிய செயலியுடன் கனெக்ட் செய்யும் வசதியுடனேயே வெளியாகும் எனத் தெரிவித்திருக்கிறது ராயல் என்ஃபீல்டு.
ராயல் என்ஃபீல்டு விங்மேன் செயலியில் உள்ள வசதிகள்:
ராயல் என்ஃபீல்டு வாடிக்கையாளர்கள் தங்களுடைய பைக்கைப் பற்றிய முழுமையான தகவல்களைத் தெரிந்து கொள்ளும் பொருட்டு புதிய செயலியை வெளியிட்டிருக்கிறது அந்நிறுவனம். பைக்கின் நிலை, பெட்ரோல் அளவு, பேட்டரி நிலை மற்றும் சர்வீஸ் எச்சரிக்கை உள்ளிட்ட வசதிகளைக் கொண்டிருக்கிறது விங்மேன் செயலி. மேலும், இன்ஜின் ஆன்/ஆஃப் அலர்ட், பார்க்கிங் லொகேஷன் அப்டேட் மற்றும் டிராக்கிங் மற்றும் மோட்டார் சைக்கிளைக் கண்டறியும் வசதி எனப் பல்வேறு கூடுதல் வசதிகளும் அளிக்கப்பட்டிருக்கிறது. இதைத் தவிர நாம் வாகனம் ஓட்டும் முறை, சராசரி வேகம், சாரசரி தூரம், அதிகம் பயணம் செய்த பாதை எனப் பல தகவல்களையும் தொகுத்து நமக்கு வழங்கிறது இந்தப் புதிய செயலி. விங்மேன் செயலியின் மூலமாகவே ரோடுசைடு அசிஸ்டன்ஸ் சேவையையும் வழங்கத் திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம்.