இந்தியாவில் ஸ்ட்ராங் மற்றும் பிளக்-இன் ஹைபிரிட் கார்களை அறிமுகப்படுத்தத் திட்டமிடும் ரெனோ
டொயோட்டா மற்றும் மாருதி சுஸூகியை அடுத்து, இந்தியாவில் ஸ்ட்ராங் ஹைபிரிட் பவர்ட்ரெயின்களை தங்களுடைய எதிர்கால கார் மாடல்களில் அறிமுகப்படுத்தத் ரெனோ நிறுவனம் திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. திறன் மிகுந்த, அதே நேரம் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில், தங்களது எதிர்கால எலெக்ட்ரிக் வாகன லைன்அப்புடன், ஸ்ட்ராங் ஹைபிரிட் மற்றும் பிளக்-இன் ஹைபிரிட் கார் மாடல்களை உருவாக்கவிருக்கிறது அந்நிறுவனம். மேலும், இந்தியாவில் மற்ற நிறுவனங்களுடன் போட்டியிடும் விலையில் அவற்றை வழங்க, உள்நாட்டிலேயே ஸ்ட்ராங் ஹைபிரிட் பவர்ட்ரெயின்களை உற்பத்தி செய்யவும் திட்டமிட்டிருக்கிறது ரெனோ. ஏற்கனவே இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் க்விட், ட்ரைபர் மற்றும் கைகர் ஆகிய மாடல்களை அப்படியே உற்பத்தி செய்து வருகிறது ரெனோ.
ரெனோவின் ஸ்ட்ராங் மற்றும் பிளக்-இன் ஹைபிரிட் பவர்ட்ரெயன்கள்:
தற்போது ரெனோ வசம், ஃபார்முலா 1 திட்டத்தின் கீழ் கொண்டிருக்கும் தொழில்நுட்பங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட 140hp மற்றும் 160hp ஆகிய இரண்டு ஸ்ட்ராங் ஹைபிரிட் பவர்ட்ரெய்ன்களைக் கொண்டிருக்கிறது ரெனோ. இந்த புதிய ஹைபிரிட் பவர்ட்ரெயின்களைக் கொண்ட கார்களை இந்தியாவில் ரெனோ அறிமுகப்படுத்தும் பட்சத்தில், டொயோட்டா, மாருதி சுஸூகிக்கு மற்றும் ஹோண்டாவுக்கு அடுத்தபடியாக, இந்தியாவில் ஹைபிரிட் கார்களை அறிமுகப்படுத்தும் நிறுவனமான ரெனோ இருக்கும். பிற கார் தயாரிப்பாளர்கள் ஹைபிரிட் கார்களைத் தவிர்த்து நேரடியாக எலெர்ட்ரிக் வாகனங்களை உருவாக்கியோ அல்லது உருவாக்கத் திட்டமிட்டோ வருவது குறிப்பிடத்தக்கது. 2024-25ல் எலெக்ட்ரிக் க்விட்டின் அறிமுகத்தைத் தொடர்ந்து, மேற்கூறிய பவர்ட்ரெயின்களைக் கொண்ட புதிய கார்களை இந்தியாவில் ரெனோ வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.