2,800 கோடி செலவில் 35 ஹைட்ரஜன் ரயில்களை இயக்கும் ரயில்வே திட்டம்!
ரயில்வே அமைச்சகம் ஹைட்ரஜன் ரயில்களை இயக்க ரூ.2,800 கோடி மதிப்பில் 35 ஹைட்ரஜன் ரயில்களை கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளது. இதன்படி, மலைப்பிரதேசங்கள் மற்றும் பாரம்பரிய ரயில்கள் ஓடும் இடத்தில் ஹைட்ரஜன் ரயில்களை இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தை இயக்க இதற்காக சீமன்ஸ், கும்மின்ஸ், ஹிடாச்சி, பெல் மற்றும் மேதா சர்வோ ஆகிய நிறுவனங்களுடன் ரயில்வே அமைச்சகம் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த கூட்டத்தில் பலன் கிடைத்ததால், இத்திட்டத்தை விரைவு படுத்த தங்கள் கருத்தை தெரிவித்துள்ளதாகவும், ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், தற்போது டீசல் மற்றும் எலக்ட்ரிக் ரயில்களில் ஹைட்ரஜன் எரிபொருள் பேட்டரிகளை பொருத்தி இயக்கும் பரிசோதனையில் மேதா சர்வோ என்ற நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இதுதான் ஹைட்ரஜன் ரயிலின் முதல் மாதிரியாக இருக்கும்.
மலை வாழிட நகரங்களுக்கு 35 ஹைட்ரஜன் ரயில்களை இயக்க திட்டம்
எப்போது இயக்கப்படும்? இந்த ரயில் திட்டம் ஜிந்த், சோனிபட் வழித்தடத்தில் இந்தாண்டு இறுதியில் இயக்க வாய்ப்புள்ளது. மேலும், ஒரு ஹைட்ரஜன் ரயில் தயாரிக்க சுமார் ரூ.80 கோடியும், தரை கட்டமைப்புகளுக்கு ஒரு வழித்தடத்துக்கு ரூ.70 கோடியும் செலவாகும் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. தற்போது, பயன்பாட்டில் இருக்கும் சில மெட்ரோ ரயில்களைக் காட்டிலும் மிகக் குறைவான கட்டணத்தில் இந்த ரயில் பயன்பாட்டிற்கு வர வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து, ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவிக்கையில், பசுமை போக்குவரத்து தொழில்நுட்ப முறையில் ஹைட்ரஜனை எரிபொருளாக பயன்படுத்துவது அதிகம் லாபம் தரும் எனக்கூறியுள்ளார்.