வாடிக்கையாளர்களுக்கு சார்ஜருக்கான தொகையை திரும்ப அளிக்கவிருக்கும் ஓலா நிறுவனம்
ஓலா ஸ்கூட்டர் வாங்கும் போது, அதற்கான சார்ஜரை தனியாக வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு அதற்கான பணத்தை திருப்பி அளிக்க முடிவு செய்திருக்கிறது ஓலா நிறுவனம். ரூ.1.5 லட்சத்திற்குள் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்யும் நிறுவனத்திற்கு FAME II திட்டத்தின் கீழ் மானியம் வழங்கி வருகிறது மத்திய அரசு. முன்னர் ஓலா S1 ப்ரோ ஸ்கூட்டர்களுக்கான சார்ஜரை ரூ.9,000 - ரூ.19,000 விலை கூடுதல் வசதியாக விற்பனை செய்து வந்தது ஓலா. ஓலாவின் இந்த நடவடிக்கை குறித்து விசாரணையை துவக்கியது மத்திய கனரக தொழில்துறை அமைச்சகம். இதனைத் தொடர்ந்தே வாடிக்கையாளர்களுக்கு ரூ.130 கோடி வரை திருப்பியளிக்க அந்நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.
FAME II மானியத் திட்டம்:
FAME II என்பது எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்களுக்கு மானியம் வழங்கும் வகையிலான மத்திய அரசின் திட்டம். இத்திட்டத்தின் கீழ் 10 லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு ரூ.10,000 கோடி ரூபாயை வழங்குகிறது மத்திய அரசு. மேலும், இதன் மூலம் உள்நாட்டில் தயாரிக்கப்படும் எலெக்ட்ரிக் வாகனங்களை 40% சலுகை விலையிலும் வாடிக்கையாளர்களுக்கு அளிக்க வழி செய்கிறது. ஓலா மட்டுமல்ல, ஏத்தர், ஹீரோ மற்றும் டிவிஎஸ் உள்ளிட்ட மற்ற எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனங்களும் சார்ஜரை கூடுதல் விலையில் தான் வழங்கி வந்தன. அந்த நிறுவனங்களின் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சம்பவங்களத் தொடர்ந்து சார்ஜருடன் கூடிய ஓலா S1 ப்ரோ ஸ்கூட்டரின் விலையை 1.25 லட்சம் ரூபாயாகக் குறைத்திருக்கிறது ஓலா.