நுகர்வோர் உரிமை மீறல் தொடர்பாக ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்திற்கு ஷோ-காஸ் நோட்டீஸ்
இந்தியாவின் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) நுகர்வோர் உரிமைகள் மீறல் தொடர்பாக ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்திற்கு ஷோ-காஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. முன்னணி எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான ஓலா எலக்ட்ரிக்கிற்கு இது பெருகிய சிக்கலை ஏற்படுத்துகிறது. இந்த நோட்டீசால் அதன் பங்குகள் திங்களன்று (அக்டோபர் 7) 9% சரிந்தன. முன்னதாக, நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பவிஷ் அகர்வால் நகைச்சுவை நடிகர் குணால் கம்ராவுடன் சண்டையிட்டதும் சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது. தவறான விளம்பரங்கள் மற்றும் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான ஓலா எலக்ட்ரிக்கிற்கு 15 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஓலா எலக்ட்ரிக் திங்களன்று ஒரு ஒழுங்குமுறை தாக்கல் மூலம் இந்த நோட்டீஸ் வந்துள்ளதை உறுதிப்படுத்தியது.
சிசிபிஏ அறிவிப்புக்கான பதில்
சிசிபிஏ அறிவிப்புக்கு பதிலளிக்கும் விதமாக, ஓலா எலக்ட்ரிக் நுகர்வோர் கவலைகளை நிவர்த்தி செய்வதில் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது. சிசிபிஏவுக்கு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள், துணை ஆவணங்களுடன் பதிலை வழங்குவதாகவும் நிறுவனம் கூறியுள்ளது. ஓலா எலக்ட்ரிக் சிஎஃப்ஓ ஹரிஷ் அபிசந்தானி, "நிறுவனம் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்திற்கு கொடுக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் துணை ஆவணங்களுடன் பதிலளிக்கும்" என்று தெரிவித்துளளார். ஓலாவின் ஸ்கூட்டர்கள் மற்றும் சேவைத் தரம் குறித்த வாடிக்கையாளர் புகார்கள் அதிகரித்துள்ள நேரத்தில் சிசிபிஏ அறிவிப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மின்ட் அறிக்கையின்படி, நிறுவனம் ஒவ்வொரு மாதமும் 80,000 வாடிக்கையாளர் புகார்களைப் பெறுகிறது. கடந்த மாதம் சில ஓலா எலக்ட்ரிக் சேவை மையங்களுக்குச் சென்ற எச்எஸ்பிசி ஆய்வாளர்கள், பெரும்பாலான சேவை மையங்கள் போதுமான சேவைத் தரத்தில் இல்லை எனக் கண்டறிந்தனர்.
சிசிபிஏ அறிவிப்பு ஓலா எலக்ட்ரிக்கிற்கு எதிரான நுகர்வோர் புகார்களை விவரிக்கிறது
சிசிபிஏ அறிவிப்பு செப்டம்பர் 2023 மற்றும் ஆகஸ்ட் 2024க்கு இடையில் நேஷனல் கன்ஸ்யூமர் ஹெல்ப்லைனில் 9,948 நுகர்வோர் புகார்களை அடிப்படையாகக் கொண்டது. தாமதமான டெலிவரிகள் மற்றும் பழுதடைந்த வாகனங்கள், மோசமான வாடிக்கையாளர் சேவை மற்றும் தவறான விளம்பரங்கள் ஆகியவை புகார்களில் அடங்கும். இவற்றில், 1,899 புகார்கள் ஆர்டர் செய்யப்பட்ட மின்சார ஸ்கூட்டர்களைப் பெறுவதில் தாமதம் மற்றும் அதிக எண்ணிக்கையிலான புகார்கள் (3,364) சேவையில் தாமதம் மற்றும் பழுது தொடர்பானவையார் உள்ளன. பல நுகர்வோர் தங்கள் ஓலா ஸ்கூட்டர்களில் உற்பத்தி குறைபாடுகள், மோசமான தரம் மற்றும் தொடர்ச்சியான தொழில்நுட்ப சிக்கல்கள் குறித்தும் புகார் தெரிவித்தனர்.