MG-யின் புதிய எலெக்ட்ரிக் கார்.. எப்போது வெளியீடு?
தங்களுடைய காமெட் எலெக்ட்ரிக் காரின் (Comet EV) உற்பத்தியை இந்தியாவில் தொடங்குவதாக அறிவித்திருக்கிறது எம்ஜி மோட்டார் நிறுவனம். அந்நிறுவனத்தின் சிறிய எலெக்ட்ரிக் காராக இந்த புதிய காமெட் எலெக்ட்ரிக் கார் இருக்கும். இந்தியாவில் வரும் ஏப்ரம் 19-ம் தேதி இந்த புதிய எலெக்ட்ரிக் காரை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது எம்ஜி. அதேநாளே இந்தக் காருக்கான புக்கிங்குகளும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நகரங்களில் ட்ராஃபிக்கல் எளிதாக பயன்படுத்தும் வகையில் சிறிய எலெக்ட்ரிக் காராக இதனை வடிவமைத்திருக்கிறது எம்ஜி. வருடத்திற்கு 25,000 கார்களை உற்பத்தி செய்யத் திட்டமிட்டிருக்கிறது எம்ஜி. இந்தக் காரினை GSEV பிளாட்ஃபார்மில் தயாரித்திருக்கிறது எம்ஜி. இதே பிளாட்ஃபார்மில் மேலும் பல சிறிய எலெக்ட்ரிக் கார் மாடல்களை அந்நிறுவனம் தயாரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
எம்ஜி காமெட் எலெக்ட்ரிக் கார்:
இந்தியாவில் குஜராத்தில் உள்ள ஹலால் தொழிற்சாலையில் இந்தப் புதிய காரின் உற்பத்தியைத் தொடங்கியிருக்கிறது எம்ஜி. இந்த மாதமே இந்தக் கார் வெளியானாலும், புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு அடுத்த மாத இறுதியில் தான் டெலிவரி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 45hp பவரை வெளிப்படுத்தக்கூடிய மோட்டார் மற்றும் 20kWh பேட்டரியுடன் இந்தக் கார் வெளியாகவிருக்கிறது. மேலும், 250 கிமீ ரேஞ்சை இந்தக் கார் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் டாடா டியாகோ EV, சிட்ரன் eC3 ஆகிய எலெக்ட்ரிக் கார்களுக்குப் போட்டியாக காமெட் EV-யை நிலைநிறுத்தத் திட்டமிட்டிருக்கிறது எம்ஜி. ரூ.10 - ரூ.12 வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் இது இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.