6ம் தலைமுறை E-கிளாஸ் மாடலை அறிமுகப்படுத்தியது மெர்சிடீஸ்!
சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படவிருக்கும் ஆறாம் தலைமுறை E-கிளாஸ் செடான் மாடலை அறிமுகப்படுத்தியிருக்கிறது சொகுசு கார் தயாரிப்பாளரான மெர்சிடீஸ் பென்ஸ். தற்போது ஸ்டாண்டர்டான வீல்பேஸ் கொண்ட மாடலையே வெளியிடவிருக்கிறது மெர்சிடீஸ். இதன் மற்ற செடான்களான S-கிளாஸ் மற்றும் C-கிளாஸைப் போலவே இதனையும் வடிவைமைத்திருக்கிறது அந்நிறுவனம். சில நாடுகளில் 115 கிமீ ரேஞ்சுடன் இதன் ப்ளக்-இன் ஹைபிரிட் மாடலையும் வழங்கவிருக்கிரது மெர்சிடீஸ். 196hp முதல் 375hp வரை பவரை வெளிப்படுத்தக்கூடிய நான்கு மற்றும் ஆறு சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களை இதன் வேரியன்ட்களில் கொடுத்திருக்கிறது மெர்சிடீஸ். இதன் அனைத்து மாடல்களிலுமே 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை ஸ்டாண்டர்காகக் கொடுத்திருக்கிறது அந்நிறுவனம்.
இந்தியாவிற்கு எப்போது:
தற்போது வெளியாகும் ஸ்டாண்டர்டு வீல்பேஸ் மாடல் இந்தியாவிற்கு இல்லை. இதன் நீளமான வீல்பேஸ் கொண்ட மாடலை இதன் பிறகு வெளியிடுவோம் எனத் தெரிவித்திருக்கிறது மெர்சிடீஸ். அந்த நீளமான வீல்பேஸ் கொண்ட மாடலே இந்தியாவில் வெளியிடப்படும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போதும் இந்தியாவில் நீளமான வீல்பேஸ் கொண்ட ஐந்தாம் தலைமுறை E-கிளாஸ் மாடலே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சீனா, இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் மட்டுமே நீளமான வீல்பேஸ் கொண்ட மாடலை மெர்சிடீஸ் விற்பனை செய்து வருகிறது. அதுவும் வலதுபக்க ட்ரைவர் சீட் கொண்ட மாடல்கள் இந்தியாவில் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன. 2024-ன் பிற்பகுதியிலேயே 6ம் தலைமுறை E-கிளாஸின் நீளமான வீல்பேஸ் கொண்ட மாடலை இந்தியாவில் மெர்சிடீஸ் நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.