மஹிந்திரா Thar, XUV வாகனங்களின் டிசைனர் ராம்க்ரிபா அனந்தன்: ஓலா எலக்ட்ரிக் தலைமை டிசைனராக அசத்தல்
செய்தி முன்னோட்டம்
இந்திய சாலைகளில் கம்பீரமான தோற்றத்துடன் வலம் வரும் மஹிந்திராவின் தார், எக்ஸ்யூவி, ஸ்கார்பியோ போன்ற எஸ்யூவி கார்களின் பிரம்மாண்ட டிசைன்களுக்கு பின்னால் இருக்கும் முக்கியமான நபர் ராம்க்ரிபா அனந்தன். மஹிந்திரா நிறுவனத்தின் முன்னாள் தலைமை டிசைனரான இவர், இந்திய வாகன வடிவமைப்பில் தனக்கென ஒரு தனித்துவமான பாதையை உருவாக்கியவர். பிட்ஸ் பிலானி கல்வி நிறுவனத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டப்படிப்பை முடித்த ராம்க்ரிபா, மும்பை ஐஐடியின் 'IDC School of Design' பிரிவில் தொழில்துறை வடிவமைப்பு பாடப் பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றார். 1997-ஆம் ஆண்டு மஹிந்திரா நிறுவனத்தில் இன்டீரியர் டிசைனராக தனது பயணத்தைத் தொடங்கினார். பொலேரோ, ஸ்கார்பியோ மற்றும் சைலோ கார்களின் உள்வடிவமைப்பில் இவரது பங்களிப்பு மிக முக்கியமானது.
இன்ஸ்பிரேஷன்
மஹிந்திராவின் மாபெரும் வெற்றி & 'சிறுத்தை' இன்ஸ்பிரேஷன்
2005-ஆம் ஆண்டு மஹிந்திரா நிறுவனத்தின் டிசைனிங் பிரிவுத் தலைவராக பொறுப்பேற்ற ராம்க்ரிபா அனந்தன், உலகத்தரம் வாய்ந்த நவீன டிசைன் ஸ்டுடியோவை அமைத்தார்.
எக்ஸ்யூவி 500 காரை வடிவமைக்கும் போது, சிறுத்தையின் சுறுசுறுப்பு மற்றும் வேகத்தை உத்வேகமாகக் கொண்டு காரின் வெளித்தோற்றத்தை உருவாக்கியதாக பழைய பேட்டி ஒன்றில் நினைவுகூர்ந்துள்ளார்.
2019-இல் தலைமை டிசைனராக உயர்வு பெற்ற இவர், தார், எக்ஸ்யூவி 700 மற்றும் ஸ்கார்பியோ ஆகிய புகழ்பெற்ற மாடல்களின் புதிய தலைமுறை வடிவமைப்புக்கு தலைமை தாங்கினார்.
தவிர TUV300, KUV100, XUV300 மற்றும் மராசோ ஆகிய வாகனங்களின் வடிவமைப்பிலும் இவரது பங்கு உண்டு.
ஓலா எலக்ட்ரிக்
சொந்த நிறுவனம் & ஓலா எலக்ட்ரிக்கில் புதிய பொறுப்பு
2021-இல் மஹிந்திரா நிறுவனத்திலிருந்து விலகிய ராம்க்ரிபா அனந்தன், 'KRUX Studio' என்ற தனது சொந்த வடிவமைப்பு நிறுவனத்தைத் தொடங்கினார்.
அதனைத் தொடர்ந்து 2022-ஆம் ஆண்டு முதல் 'ஓலா எலக்ட்ரிக்' நிறுவனத்தின் டிசைனிங் பிரிவுத் தலைவராக பொறுப்பேற்று, ஓலாவின் இருசக்கர வாகனங்கள் மற்றும் வரவிருக்கும் நான்கு சக்கர மின்சார வாகனங்களின் வடிவமைப்பு முயற்சிகளுக்கு தலைமை தாங்கி வருகிறார்.
இந்திய வாகனத் துறைக்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக 2021-ஆம் ஆண்டில் பிட்ஸ் பிலானி நிறுவனம் இவருக்கு Distinguished Alumnus Award வழங்கி கௌரவித்தது.