வெளிநாட்டு ஏற்றுமதியிலும் நம்பர் 1 இடத்தைப் பிடித்தது மாருதி சுசுகி
மாருதி சுசுகி இந்தியா உள்நாட்டு கார் சந்தையில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வரும் நிலையில், தற்போது பயணியர் வாகனங்கள் ஏற்றுமதியிலும் முன்னணியில் உள்ளது. இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் (SIAM) வெளியிட்ட சமீபத்திய தரவுகள் மூலம் இந்த தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நிதியாண்டு 2024-25க்கான ஏப்ரல்-ஜூலை காலத்தில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் இருந்து கார் ஏற்றுமதி 14.48% அதிகரித்து 242,412 யூனிட்களாக உயர்ந்தது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் 211,750 யூனிட்களாக இருந்தது. மாருதி சுசுகி இந்தியா, பயணியர் வாகன ஏற்றுமதி பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. அதை தொடர்ந்து ஹூண்டாய் மோட்டார் இந்தியா, வோல்க்ஸ்வாகன் இந்தியா, ஹோண்டா கார்ஸ் இந்தியா மற்றும் நிசான் மோட்டார் இந்தியா ஆகியன இடம் பிடித்துள்ளன.
ஜப்பானுக்கு முதன்முறையாக ஏற்றுமதி செய்த மாருதி சுசுகி
நிதியாண்டு 2024-25 காலகட்டத்தில் இந்தியாவிலிருந்து அதிக பயணியர் வாகனங்களை ஏற்றுமதி செய்த நிறுவனங்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள மாருதி சுசுகி 93,858 யூனிட்களை ஏற்றுமதி செய்துள்ளது. இந்த நிறுவனம் தற்போது 15 மாடல்களை 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. மேலும், மாருதி சுசுகி ஜப்பானுக்கு தனது ஃப்ரான்க்ஸ் எஸ்யூவி மாடலை முதன்முறையாக இந்த மாதம் ஏற்றுமதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. மாருதி சுசுகிக்கு அடுத்தபடியாக ஹூண்டாய் 58,150 யூனிட்களும், வோல்க்ஸ்வாகன் இந்தியா 26,553 யூனிட்களும் ஏற்றுமதி செய்து இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளன. ஹோண்டா 20,719 யூனிட்களுடன் நான்காவது இடத்திலும், நிசான் 17,182 யூனிட்களுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளன.