BS6 Phase-II விதிகளுக்கு ஏற்ப தங்கள் கார் மாடல்களை அப்டேட் செய்திருக்கிறது மாருதி!
இந்தியாவில் பிஎஸ் 6-ன் இரண்டாம் கட்ட மாசுக்கட்டுப்பாட்டு கொள்கைகள் கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. ஆட்டோமொபைல் நிறுவனங்கள் ஏற்கனவே இதற்கேற்ப தங்கள் வாகனங்களை அப்டேட் செய்து வந்தன. தற்போது மாருதி நிறுவனமும் புதிய மாசுக்கட்டுப்பாட்டு கொள்கைகளுக்கு ஏற்ப தங்களது அனைத்து வாகனங்களையும் அப்டேட் செய்திருப்பதாக அறிவித்திருக்கிறது. இந்தியாவில் தற்போது 15 மாடல் கார்களை விற்பனை செய்து வருகிறது மாருதி சுஸூகி. இந்த கார்கள் அனைத்து புதிய கொள்கைகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்பட்டிருப்பதாகவும், அப்டேட் செய்யப்பட்ட மாடல்கள் அனைத்திலும் E20 எரிபொருளை பயன்படுத்த முடியும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த மாசுக்கட்டுப்பாட்டு அப்டேட்களுடன், சில பாதுகாப்பு அம்சங்களையும் சேர்த்து அப்டேட் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது மாருதி.
என்னென்ன அப்டேட்கள்?
புதிய இரண்டாம் கட்ட மாசுக்கட்டுப்பாட்டு விதிகளின்படி, வாகனம் வெளியிடும் மாசின் அளவை நிகழ் நேரத்தில் கண்காணிக்கவும், மாசுக் கட்டுப்பாட்டுக் கருவிகளில் பிரச்சினை ஏற்பட்டால் அது குறித்து தெரியப்படுத்தவும், அதில் ஆன்-போர்டு டயக்னாஸ்டிக் கருவியை பொருத்தியிருக்க வேண்டும். அதற்கேற்ற வகையில் கார்கள் தற்போது அப்டேட் செய்யப்பட்டுள்ளன. மேலும், இந்தக் கார்களில் 20% எத்தனால் கலப்பு கொண்ட E20 எரிபொருளையும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த மாசுக் கட்டுப்பாட்டு அப்டேட்களுடன், ESC (Electronic Stability Control) பாதுகாப்பு வசதியையும் சேர்த்து அளித்திருக்கிறது மாருதி. இந்த அப்டேட்களை தங்களுடைய ஹேட்ச்பேக், செடான், எம்பிவி, எஸ்யூவி மற்றும் வணிகப் பயன்பாட்டு வாகனங்கள் என அனைத்திலும் அளித்திருக்கிறது மாருதி சுஸூகி.