பொலிரோ கார் விற்பனை செப்டம்பர் மாதத்தில் 16 சதவீதம் அதிகரிப்பு
கடந்த செப்டம்பரில், மஹிந்திராவின் பொலிரோ மாடல் கார்கள் விற்பனை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து கார்வாலே வெளியிட்டுள்ள தகவலின்படி, வழக்கமான பொலிரோ மற்றும் பொலிரோ நியோ எஸ்யூவிகள் விற்பனை அதிகரித்து செப்டம்பரில் 9,519 யூனிட்கள் விற்பனையாகியுள்ளது. செப்டம்பர் 2022 இல் 8,108 யூனிட் பொலிரோ எஸ்யூவி விற்பனையாகி இருந்த நிலையில், இந்த ஆண்டு 16% வளர்ச்சியைக் கண்டுள்ளது. செப்டம்பர் மாதத்திற்கான பொதுவான விற்பனை தரவு ஏற்கனவே வெளியாகியிருந்த நிலையில், தற்போது குறிப்பிட்டு பொலிரோ மாடலுக்கான விற்பனை தரவை நிறுவனம் வெளியிட்டுள்ளது. எனினும், மற்ற மாடல்களுக்கான விற்பனை தரவுகளை வெளியிடுவதை நிறுவனம் தவிர்த்துவிட்டது.
டீசல் என்ஜின்களுடன் பிரத்யேகமாக விற்பனையாகும் பொலிரோ
மஹிந்திரா பொலிரோ மற்றும் பொலிரோ நியோ ஆகியவை டீசல் என்ஜின்களுடன் பிரத்தியேகமாக கிடைக்கின்றன. பொலிரோவில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 75 ஹெச்பி ஆற்றலையும் 210 என்எம் டார்க்கையும் உருவாக்குகிறது மற்றும் ஐந்து வேக மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. மறுபுறம், பொலிரோ நியோ 100 ஹெச்பி ஆற்றலையும் 260 என்எம் டார்க்கையும் வழங்கும் 1.5 லிட்டர் டீசல் மோட்டார் மூலம் இயக்கப்படுகிறது. இது ஐந்து வேக மேனுவல் கியர்பாக்ஸுடனும் இணைக்கப்பட்டுள்ளது. செப்டம்பரில் மஹிந்திரா பொலிரோ மாடல்களின் விற்பனை அதிகரிப்பானது, இந்த மாடல் கார்களின் கவர்ச்சிகரமான வடிவமைப்பின் காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.