30,000 கேரன்ஸ் மாடல் கார்களை திரும்பப்பெறும் கியா
தென் கொரியாவைச் சேர்ந்த வாகனத் தயாரிப்பு நிறுவனமான கியா, இந்தியாவில் தங்களது கேரன்ஸ் மாடலை திரும்பப்பெறுகிறது. பொதுவாக, ஒரு வாகனத் தயாரிப்பாளர் தங்களது வாகனத்தில் தயாரிப்பின் போதே கோளாறு ஏற்பட்டிருப்பதைக் கண்டறிந்தால் ரீகால் செய்து, தங்களுடைய செலவிலேயே அதனை சரி செய்தோ அல்லது மாற்றியோ தருவது வழக்கம். தற்போது கேரன்ஸ் மாடலின் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டரில் உள்ள கோளாறு காரணமாக அந்த மாடலை ரீகால் செய்வதாக அறிவித்திருக்கிறது கியா நிறுவனம். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை தயாரிக்கப்பட்ட 30,297 கார்களின் இன்ஸ்ட்ரூமன்ட் கிளஸ்டர்கிளில் இந்த கோளாறு இருக்கலாம் எனக் குறிப்பிட்டிருக்கிறது கியா நிறுவனம்.
ரீகால் செய்யப்பட்ட கேரன்ஸ்:
ஒருவேளை ஏற்கனவே தங்களுடைய கியா கார்களில் வாடிக்கையாளர்கள் இந்த பிரச்சினையை சந்தித்திருக்கும் பட்சத்தில், உடனடியாக அருகில் இருக்கும் கியா ஷோரூம்களில் கொடுத்து இந்த பிரச்சினையை சரி செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கியா ஷோரூம்களில் இருந்தே பிற வாடிக்கையாளர்களை அழைத்து கேரன்ஸ் காரை சோதனை செய்து சரி செய்து வருவதாகவும் தெரிவித்திருக்கிறது அந்நிறுவனம். கடந்த ஆண்டு மே மாதம் இதேபோல் 4,000 கேரன்ஸ் மாடலை மென்பொருள் கோளாறு காரணமாக ரீகால் செய்தது கியா. அதனைத் தொடர்ந்து, ஏர்பேக் கன்ட்ரோல் மாட்யூலில் கோளாறு இருப்பதாகக் கூறி கடந்த அக்டோபர் மாதம் 44,000 கேரன்ஸ் மாடல் கார்களை அந்நிறுவனம் ரீகால் செய்தது குறிப்பிடத்தக்கது.