Page Loader
சாதாரண காரையும் ஸ்மார்ட் கார் ஆக்கும் 'JioMotive' சாதனத்தை வெளியிட்டிருக்கிறது ஜியோ
சாதாரண காரையும் ஸ்மார்ட் கார் ஆக்கும் 'JioMotive' சாதனத்தை வெளியிட்டிருக்கிறது ஜியோ

சாதாரண காரையும் ஸ்மார்ட் கார் ஆக்கும் 'JioMotive' சாதனத்தை வெளியிட்டிருக்கிறது ஜியோ

எழுதியவர் Prasanna Venkatesh
Nov 06, 2023
02:51 pm

செய்தி முன்னோட்டம்

சாதாரண காரிலும் ஸ்மார்ட்டான வசதிகளை பயன்படுத்த முடிகிற வகையில் புதிய ஜியோமோட்டிவ் (JioMotive) என்ற புதிய சாதனத்தை வெளியிட்டிருக்கிறது ஜியோ நிறுவனம். காரின் இருப்பிடத்தை அறிவது மற்றும் கார் திருடு போகாமல் தடுப்பது உள்ளிட்ட சில வசதிகள் விலை குறைந்த மற்றும் பல ஆண்டுகள் பழமையான கார்களில் இருக்காது. அப்படியான கார்களிலும் மேற்கூறிய வசதிகளுடன், இன்னும் பல்வேறு ஸ்மார்ட் வசதிகளை பயன்படுத்தும் வகையிலான சாதனமாக ஜியோமோட்டிவ் சாதனத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஜியோ. தற்போதைய காலத்தில் வெளியாகும் பல்வேறு உயர்ரக கார்களில் இணையத்தை அணுகும் வசதி கூட அளிக்கப்படும் நிலையில், இந்த ஜியோமோட்டிவ் சாதனத்தைப் பயன்படுத்தி பழைய கார்களையும் நவீன கார்களைப் போல இணைய வசதி கொண்டதாக மாற்ற முடியுமாம்.

கார்

வேறு என்ன வசதிகளைக் கொண்டிருக்கிறது ஜியோமோட்டிவ்? 

இ-சிம் ஒன்றையும் கொண்டிருக்கும் ஜியோமோட்டிவ் சாதனமானது, நம்முடைய மொபைலில் சிம் கார்டின் டேட்டாவையே பயன்படுத்திக் கொண்டு இணையத்தை அணுகும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதனால் தனித்தனியாக டேட்டா பேக்குக்காக செலவழிக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும், இந்த சாதனத்தின் மூலமே வாகனத்தின் செயல்திறன், வாகனத்தின் இருப்பிடம், வாகன ஆரோக்கியம் மற்றும் ஓட்டும் செயல்திறன் ஆகியவற்றை நாம் கண்காணிக்க முடியும். இத்துடன் ஜியோ-ஃபென்சிங் மற்றும் டைம் ஃபென்சிங் வசதிகளையும் உள்ளடக்கியிருக்கிறது ஜியோமோட்டிவ். ஜியோஃ-பென்சிங் வசதியின் மூலம், நம்முடைய கார் குறிப்பிட்ட எல்லையைக் கடந்து பயணித்தால் நமக்கு எச்சரிக்கை சமிஞ்ஞை அனுப்பும் வகையில் செட் செய்து கொள்ள முடியும். அதேபோல் டைம் ஃபென்சிங் வசதியுடன் குறிப்பிட்ட நேரத்தைக் கடந்தும் வாகனம் இயங்குகிறதா என்பதைக் கண்காணிக்க முடியும்.

ஜியோ

ஜியோமோட்டிவ் சாதனத்தை எப்படிப் பயன்படுத்த வேண்டும்: 

இந்த சாதனத்தை நேரடியாக நாமே நம்முடைய வாகனத்தில் பொறுத்தி பயன்படுத்த முடியும். முதலில் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து ஜியோதிங்க்ஸ் (JioThings) செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பின்னர் நம்முடைய ஜியோ மொபைல் எண்ணைக் கொடுத்து அந்த செயலில் லாக் இன் செய்து, அதில் ஜியோமோட்டிவ் தேர்வை தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் பின்னர் ஜியோமோட்டிவ் சாதனத்தின் IMEI எண் மற்றும் நம்முடைய வாகனத் தகவல்களை அந்த செயலியில் உள்ளிட வேண்டும். அதனைத் தொடர்ந்து ஜியோமோட்டிவ் சாதனத்தை நம்முடைய காரின் OBD போர்ட்டில் பொருத்தி காரை ஸ்டார்ட் செய்து ஓகே செய்தால் போதும். இந்த ஸ்மார்ட் சாதனத்தை இந்தியாவில் ரூ.4,999 விலையில் வெளியிட்டிருக்கிறது ஜியோ.