2030க்குள் 8 புதிய எலக்ட்ரிக் வாகனங்களை இந்தியாவில் களமிறக்க ஜாகுவார் லேண்ட் ரோவர் முடிவு
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஜாகுவார் லேண்ட் ரோவர் 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் எட்டு பேட்டரி அடிப்படையிலான எலக்ட்ரிக் வாகனங்களை அறிமுகப்படுத்த இலக்கு நிர்ணயித்துள்ளது. ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் ஏற்கனவே ஜாகுவார் ஐ-பேஸ் என்ற ஒரு எலக்ட்ரிக் கார இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், ஒரு கலந்துரையாடலில் பேசிய ஜாகுவார் லேண்ட் ரோவர் தலைமை வணிக அதிகாரி லெனார்ட் ஹூர்னிக், இந்திய சந்தையில் புதிதாக களமிறக்கப்படும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான ஆர்டர்களை அடுத்த ஆண்டு தொடங்க உள்ளதாகவும், 2025 டெலிவரியை தொடங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், "2030 இறுதிக்குள் இந்தியாவில் குறைந்தது 8 எலக்ட்ரிக் கார்களை களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம்." என்று அவர் குறிப்பிட்டார்.
ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்களின் விற்பனை இந்தியாவில் அதிகரிப்பு
இந்த நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில், இந்தியாவில் நிறுவனத்தின் விற்பனை 100 சதவீதத்திற்கும் அதிகமாக வளர்ந்துள்ளது என்று லெனார்ட் ஹூர்னிக் தெரிவித்துள்ளார். மேலும், இந்த நிதியாண்டின் பிற்பகுதியிலும் இந்த விற்பனை வேகம் தொடரும் என நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார். பலதரப்பட்ட கலாச்சாரங்களை கொண்டுள்ள இந்திய சந்தையில் மக்களின் நம்பிக்கையை நீண்ட காலமாக தக்கவைத்துள்ள டாடா குழுமத்தின் ஒரு பகுதியாக இருப்பது, ஜாகுவார் லேண்ட் ரோவர் விற்பனை அதிகரிப்புக்கு மிகவும் சாதகமான காரணியாக உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். இதற்கிடையே, இந்த ஆண்டின் தொடக்கத்தில், டாடா குழுமம் ஜாகுவார் லேண்ட் ரோவர் மற்றும் பிற உற்பத்தியாளர்களுக்கு பேட்டரிகளை தயாரிப்பதற்கான முதன்மை தொழிற்சாலையை அமைக்க 4 பில்லியன் பவுண்டுகள் முதலீடு செய்வதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.