இந்திய ரயில்வேயில் 43 ஆண்டுகால RAC முன்பதிவு முறை ரத்தாகிறதா?
செய்தி முன்னோட்டம்
இந்திய ரயில்வே துறையில் கடந்த 43 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வரும் RAC முன்பதிவு முறையை ரத்து செய்வது குறித்து ரயில்வே நிர்வாகம் தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி ரயில் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்யும்போது முழுமையாக உறுதி செய்யப்பட்ட டிக்கெட் கிடைக்காத பயணிகளுக்கு, காத்திருப்போர் பட்டியலுக்கு முன்னதாக RAC டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது இந்த நடைமுறையில் மாற்றம் கொண்டு வர ரயில்வே துறை ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
விளக்கம்
பயணிகளுக்கு கிடைத்து வந்த பயன்
'ரத்து செய்யப்படும் முன்பதிவுக்கு எதிரான ஒதுக்கீடு' எனப்படும் RAC டிக்கெட் வைத்திருக்கும் பயணிகளுக்கு ரயிலில் ஏறிப் பயணம் செய்வதற்கு முழு அனுமதி உண்டு; ஆனால், தனியாக ஒரு படுக்கை வசதி கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.
உதாரணமாக, சென்னை - மதுரை போன்ற வழித்தடங்களில் பயணிப்பவருக்கு RAC டிக்கெட் ஒதுக்கப்பட்டால், அவர் ரயிலில் சைடு லோயர் பெர்த்தை மற்றொரு RAC பயணியுடன் பகிர்ந்துகொண்டு அமர்ந்து பயணிக்கலாம்.
அதேசமயம், உறுதி செய்யப்பட்ட டிக்கெட் வைத்திருந்த பயணி யாரேனும் டிக்கெட்டை ரத்து செய்தாலோ அல்லது ரயிலில் ஏறாமல் இருந்தாலோ, அந்த காலிப் படுக்கை RAC பயணிக்கு முழுமையாக ஒதுக்கப்படும்.
கவலை
பண்டிகைக் காலப் பயணிகள் பாதிக்கும் அபாயம்
இந்திய ரயில்வேயில் காத்திருப்போர் பட்டியலில் உள்ள டிக்கெட்டுகள் உறுதி செய்யப்படாவிட்டால் ரயிலில் ஏற அனுமதி கிடையாது என்பதால், தீபாவளி, பொங்கல் மற்றும் கோடை விடுமுறை போன்ற நெரிசல் மிகுந்த பண்டிகைக் காலங்களில் RAC டிக்கெட்டுகளே சாமானியப் பயணிகளுக்குப் பெரும் வரப்பிரசாதமாக இருந்து வருகின்றன.
தற்போது 43 ஆண்டுகால இந்த RAC முறையை ரத்து செய்வது குறித்துப் பரிசீலிக்கப்பட்டு வரும் நிலையில், இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால் அவசரப் பயணம் மேற்கொள்ளும் லட்சக்கணக்கான பயணிகள் கடுமையான சிரமத்திற்கு ஆளாக நேரிடும் என பயணிகள் நலச் சங்கங்கள் கவலை தெரிவித்துள்ளன.